முதலமைச்சர் விஜயை திரைப்பிரபலங்கள் பலரும் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் விஜயை நடிகர் விஷால் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தையும், பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியது தொடர்பான கடிதத்தையும் வெளியிட்டுள்ள விஷால் கூறியிருப்பதாவது:-
அன்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களே,
லயோலா கல்லூரிக் காலத்திலிருந்தே நான் உங்களை 'டார்லிங்' (darling) என்றுதான் அழைத்து வருகிறேன். அந்த அன்பான அழைப்பு இன்றும் மாறவில்லை. வளர்ந்து வரும் நட்சத்திரமாக உங்களை எனக்குத் தெரிந்ததிலிருந்து, பல சவால்களையும் விமர்சனங்களையும் உங்கள் மௌனத்தாலும் வெற்றியாலும் கடந்து 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தை அடைந்து, பின்னர் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக உயர்ந்தது வரையிலான உங்கள் பயணத்தை நான் கண்டு வருகிறேன்.
இன்று உங்கள் பதவியும் பொறுப்பும் மாறியிருக்கலாம், ஆனால் உங்கள் இயல்பு மாறவே இல்லை. உங்களைச் சந்தித்ததும், அதே பழைய அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கலைஞர் ஐயா, ஜெயலலிதா அம்மா, ஸ்டாலின் அங்கிள், எனதருமை உதயாவின் வரிசையில் நம் மாநிலத்தின் முதலமைச்சரை, 'டார்லிங்' என்று அழைத்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எனக்குள் இருக்கும் அந்த ரசிகனின் உணர்வு என்றும் மாறாது.
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். வழக்கமாக வழங்கப்படும் பூங்கொத்து மற்றும் பொன்னாடையை ஏற்காமல், அதற்குப் பதிலாக அந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள மூன்று பெண் குழந்தைகளின் கல்விக்கு உங்கள் பெயரிலேயே உதவியதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அவர்கள் உங்களை நினைத்து என்றும் பெருமை கொள்வார்கள்.
மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் முதலமைச்சர் அவர்களே. உங்கள் பதவிக்காலத்தில் நேர்மறையான மாற்றங்களும் வளர்ச்சியும் பெருகட்டும்; தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றத்தைக் காணட்டும் என்று வாழ்த்துகிறேன்.


