அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் இந்த ஒப்பந்தம் தங்களை கட்டுப்படுத்தாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும் லெபனான், சிரியா மற்றும் காசாவில் இருந்து தங்கள் ராணுவம் வெளியேறாது என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இதுகுறித்து கூறுகையில்,
"நாங்கள் ஒரு உறுதியான பாதுகாப்புக் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்.
அதன்படி, நமது எதிரிகளிடமிருந்து இஸ்ரேலின் எல்லைகளையும், எல்லையோரக் குடியிருப்புகளையும் முழுமையாகப் பாதுகாக்க, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் லெபனான், சிரியா மற்றும் காசாவில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களுக்குள் காலவரையற்று தொடர்ந்து இருக்கும்.
உலக நாடுகளிடமிருந்து எவ்வளவு பெரிய அழுத்தங்கள் வந்தபோதிலும், லெபனான் எல்லைப் பகுதியிலிருந்து இஸ்ரேல் படைகள் பின்வாங்காது.
பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் இருந்து உள்ளூர்வாசிகள் அனைவரும் முழுமையாக வெளியேற்றப்படுவார்கள்.
எல்லையோரக் கிராமங்களில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்ட வீடுகள் உட்பட அனைத்துப் பயங்கரவாத உள்கட்டமைப்புகளும் முழுமையாகத் தரைமட்டமாக்கப்படும்.
லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால், இஸ்ரேல் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி ஈரானுக்கு பதிலடி கொடுக்கும்." என எச்சரித்துள்ளார்.


