எம்.ஜி.ஆர், பண்டரிபாய், சரோஜாதேவி, இரத்னா, எம்.என். நம்பியார், கே.ஏ. தங்கவேலு, நாகேஷ் உள்ளிட்ட அக்காலப் பிரபல நடிகர்–நடிகையர் நடிப்பில், 1965ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று பொங்கல் வெளியீடாக வந்து வெள்ளிவிழாக் கண்ட திரைப்படம் 'எங்க வீட்டுப் பிள்ளை.'
இத்திரைப்படம், தெலுங்கில் தாபி சாணக்யா (Tapi Chanakya) இயக்கத்தில் என்.டி. இராமாராவ் நடிப்பில் வெளிவந்த ’ராமுடு பீமுடு’ என்ற படத்தின் மறு உருவாக்கம் (Remake) ஆகும். தெலுங்கு இயக்குநரான தாபி சாணக்யாவே தமிழ்ப் படத்தையும் இயக்கியுள்ளார். எனினும், எம்.ஜி.ஆரின் நட்சத்திரத் தகுதிக்கும் தமிழ் இரசிகர்களின் இரசனைக்கும் ஏற்பக் கதையிலும் வசனங்களிலும் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன.
இரட்டை வேடங்களில் இராமு – இளங்கோ எனும் கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். வீரமும் தன்னம்பிக்கையும் கொண்ட இளங்கோவுக்குக் கன்னடத்துப் பைங்கிளி பி. சரோஜாதேவியும் பயந்த சுபாவம் கொண்ட இராமுவுக்கு இரத்னாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.
கவிஞர்கள் வாலி, ஆலங்குடி சோமு ஆகியோரின் பாடல்களுக்கு, மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
கவிஞர் வாலியின் வரிகளில் உருவான “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்” பாடல் பின்னாளில் எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலாகவே மாறியது வரலாறு. ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே’, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ ஆகிய பாடல்களும் மக்களால் பெரிதும் இரசிக்கப்பட்டன. ஆலங்குடி சோமுவின் கைவண்ணத்தில் உருவான ‘மலருக்குத் தென்றல் பகையானால்’ எனும் சோக கீதமும் மக்களைக் கவர்ந்தது.
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாயினும் சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டு வெவ்வேறு சூழல்களில் வளர்க்கப்படுவதால் ஒருவன் கோழையாகவும், மற்றொருவன் வீரனாகவும் வளர்கிறான் என்பது கதையின் மையக்கரு. இது “Nature vs Nurture” (பிறப்பு vs வளர்ப்பு) எனும் உளவியல் உண்மையை நினைவுபடுத்துகின்றது. எனினும் மனவுறுதியும் முறையான வழிகாட்டுதலும் இருந்தால் கோழையும் வீரனாகலாம் என்பதையும் படம் அழுத்தமாய்ப் பதிவுசெய்தது.
தெலுங்கில் ராமுடு-பீமுடு திரைப்படம் பெருவெற்றி பெற்றதனை அறிந்தே எம்.ஜி.ஆர் அதனைத் தமிழில் மறு உருவாக்கம் செய்திருக்கவேண்டும் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியதே. 🙂
அதைப்போலவே இரட்டையரில் ஒருவர் நல்லவர் – ஒருவர் தீயவர்; ஒருவர் கோழை - ஒருவர் வீரர் எனும் கதைக்கரு கொண்ட திரைப்படங்கள் அக்காலத்தில் இரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் இக்கதை 1967ஆம் ஆண்டு ’Ram Aur Shyam’ என்ற பெயரில் திலீப் குமார் இரட்டை வேடங்களில் நடிக்க இந்தியில் வெளிவந்து அங்கும் பெருவெற்றி பெற்றது.🙂
[’எங்க வீட்டுப் பிள்ளை’ வெற்றிவிழாப் பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி அமர்ந்திருக்கும் காட்சியிது. PC: Cinema Bioscope]
~மேகலா இராமமூர்த்தி


