TamilsGuide

சினிமாவில் போட்டி என்பது ஒரு மாயை - மனம் திறந்த நடிகை சமந்தா

"திரைத்துறையில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதற்கு எந்தவொரு பந்தயமும் இல்லை. அது வெறும் ஒரு மாயை மட்டுமே" என்று முன்னணி நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது திரையுலக அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.

அவர் பேசியதாவது, "கடந்த காலங்களில், சினிமாவில் மற்றவர்களை முந்திக்கொண்டு ஓடும் பந்தயத்தில் நானும் தீவிரமாக இருந்தேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது, இங்கு எந்தவொரு பந்தயமும் இல்லை, வெல்வதற்கோ அல்லது வீழ்த்துவதற்கோ யாரும் இல்லை. எல்லைக் கோடு என்று ஒன்றுமே கிடையாது. அதனால், இப்போது எனது பணிகளை மிகவும் தூய்மையான மனதோடு அணுகுகிறேன்." நான் ஈ மற்றும் ரங்கஸ்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்த தருணங்கள் தனக்கு மிகவும் ஸ்பெஷலானவை என்று குறிப்பிட்ட சமந்தா, இயக்குநர் சுகுமாரின் அர்ப்பணிப்பைப் வெகுவாகப் பாராட்டினார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகள், பட்ஜெட் மற்றும் தயாரிப்பாளர்களின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இயக்குநர் சுகுமார் தனது கலையை ஆன்மார்த்தமாக அணுகியதாகக் கூறினார்.

மேலும், "சினிமாவில் ஒரு காட்சியில் நடித்து முடித்ததும், நான் அந்த கதாபாத்திரத்தின் உலகத்திற்குள் சென்றுவிடுகிறேன். அதனால்தான் சினிமா மிகவும் அடிமையாக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நான் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் விழுந்தாலும், மீண்டும் சினிமாவிற்கே திரும்பி வருகிறேன். ஏனெனில், சினிமா எப்போதும் எனது முதல் காதல்" என்றார். சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண பெண்ணான தனக்கு, இவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது தொடக்கத்தில் பெரும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது என்று கூறினார்.

அவர் கூறுகையில், "ரசிகர்களின் அன்பும், அடுத்தடுத்து கிடைத்த தொடர் வெற்றிகளும் என்னை அந்த 'ஸ்டார்டம்' என்ற போதைக்கு அடிமையாக்கின. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்றுதான் நினைத்தேனே தவிர, ஒரு நடிகையாக நான் வளர்ந்திருக்கிறேனா, என்னைத் திறமைப்படுத்திக் கொண்டிருக்கிறேனா அல்லது படத்திற்கு எனது பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி ஒருபோதும் நான் யோசிக்கவில்லை. இதனால், நான் பெருமைப்படாத சில படங்களிலும் நடிக்க நேர்ந்தது" என சுயவிமர்சனம் செய்துள்ளார்.

இயக்குநர் நந்தினி ரெட்டி போன்றவர்கள் தன்னை எந்தவித முன்முடிவுகளும் இன்றி, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதாகக் குறிப்பிட்ட சமந்தா, தனது உடல்நலக் குறைவால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு தனது வாழ்க்கைப் பாடங்களை மாற்றியமைத்துக் கொண்டதாகக் கூறினார். அதன் ஒரு பகுதியாகவே, பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், சினிமாவில் மாற்றத்தைக் கொண்டு வரவும் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான Tralala Moving Pictures மூலம் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

"பெண் கதாபாத்திரங்கள் தகுதியான இடத்தைப் பெற வேண்டும் என்று நாம் சும்மா பேசிக்கொண்டிருக்காமல், நமது சொந்தப் பணத்தைப் போட்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்" என்று சமந்தா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment