பிரித்தானியாவில் கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டு, குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்குத் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி வழங்கும் ‘உதவிபெறும் மரணச் சட்டமூலம்’ வரும் நாட்களில் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லாரன் எட்வர்ட்ஸ் (Lauren Edwards) இச்சட்டமூலத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் தனிநபர் சட்டமூலங்களுக்கான குலுக்கலில் அவருக்கு இரண்டாவது முன்னுரிமை இடம் கிடைத்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ‘காமன்ஸ்’ உறுப்பினர்கள் இந்தச் சட்டமூலத்திற்குப் பெரும்பான்மை ஆதரவை வழங்கியிருந்தனர்.
எனினும், மேல் சபையான ‘பிரபுக்கள் சபையில்’ ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக, காலக்கெடு முடிவடைந்து இந்தச் சட்டமூலம் சட்டமாக மாறுவதில் தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக, பிரபுக்கள் சபையின் சில உறுப்பினர்கள் திட்டமிட்டே காலதாமதப்படுத்தும் உத்திகளைக் கையாண்டு இந்தச் சட்டமூலத்தைத் தடுத்ததாக அதன் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சட்டமூலம் வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முறைப்படி அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான முதலாவது நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


