• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயலலிதாவின் வாழ்வில் மேடும் பள்ளமுமான சம்பவங்களைக் கண்டது போயஸ் கார்டன் இல்லம்

சினிமா

தென்னகத்தின் புகழ்மிக்க நட்சத்திரமாக ஜெயலலிதா நூறாவது பட கொண்டாட்டத்தைக் கண்டது, நம்பிய மனிதர்களால் நம்பிக்கைத்துரோகத்துக்கு ஆளானது, உறவினர்களால் நடுவீதிக்கு கொண்டுவரும் நிலை உருவானது, வாய்ப்புகள் குறைந்து பொருளதாரப் பிரச்னைக்காக நாட்டியக்குழுவை நடத்தி சிரமப்பட்டது, அதிமுகவில் சேர்ந்தது, அடுத்தடுத்து அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தது என ஜெயலலிதா என்ற பெண்மணி சினிமாவில் வெளிப்படுத்திய சோகம், ஆனந்தம், துக்கம், விரக்தி வெறுமை என அத்தனை உணர்ச்சிகளையும் நிஜமாய் அனுபவித்தது இந்த வீட்டில்தான். 

விரக்தியின் விளிம்பில் நின்று இந்த வீட்டில் இருமுறை தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவைக் கூட அவர் எடுத்ததாகச் சொல்வார்கள். 

ஒருமுறை போயஸ் கார்டனில் தன்னைச் சந்திக்க வந்த ஒரு தயாரிப்பாளரைப் பேசி அனுப்பிவிட்டு மாடியிலுள்ள தனது அறைக்குப் படியேறிச்சென்ற ஜெயலலிதா திடீரென மயக்கமுற்று விழுந்தார். தலையில் அடி. பதறிய ஊழியர்கள் பதறியடித்து எம்.ஜி.ஆருக்குத் தொலைபேசியில் தகவலைச் சொன்னார்கள். எம்.ஜி.ஆர் வந்து ஜெயலலிதாவை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானார் அப்போது உதவியாக இருக்க ஜெயலலிதாவின் சித்திகளைத் தேடினார். ஆனால் அவர்கள் மாடியில் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலைக்காரர்கள் கூறினார்கள். 'மகள் மயக்கத்தில் கிடக்க, அப்படியென்ன அவர்களுக்குள் வாக்குவாதம்' எனக் குழப்பத்துடன் எம்.ஜி.ஆர் மாடிக்குப் போனார். அங்கு, “ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஆனால் கொத்துச்சாவியை யார் வைத்துக்கொள்வது” எனச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் சித்திகள். கோபமாகப் பேசி அவர்களிடமிருந்து சாவியைப் பிடுங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாராம். சில மணிநேரத்துக்குப்பின் ஜெயலலிதா கண்விழித்தபோது கொத்துச்சாவியுடன் நின்றிருந்த எம்.ஜி.ஆர், “அம்மு யார் எதிரிகள், யார் உறவுகள் எனப் பிரித்தறிந்து ஜாக்கிரதையாக இரு”என அறிவுரை சொல்லிக்கிளம்பினார்.

இப்படிஜெயலலிதாவின் வாழ்வில் மேடும் பள்ளமுமான சம்பவங்களைக் கண்டது போயஸ் கார்டன் இல்லம்.

இரண்டு மாடிகளுள்ள போயஸ் கார்டனின் முன்பக்க வீட்டில் (பழைய வீடு) கீழ்தளத்தில் நான்கு அறைகள் பெரிய வராண்டா டைனிங் ரூம் கெஸ்ட் ரூம்  இரண்டு ஆபிஸ் ரூம்கள் சமையலறையை ஒட்டி 2 பெரிய ஸ்டோர் ரூம்கள் இரண்டாவது மாடியில் இரு அறைகள். இந்த வீட்டிற்கு பின்புறம் வீட்டின் வேலையாட்களுக்கு என தனியே கட்டப்பட்ட தனியறைகள் உண்டு.  இது தவிர வீட்டின் பின்புறமுள்ள கார்ஷெட்டுக்கு மேல் பெரிய ரூம்கள் இருந்தன. 

முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் பிரமாண்ட படுக்கை அறை இருந்தது. இதனருகில் உள்ள பெரிய அறைகளில் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்கள், அவரது பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகள் இருந்தன. ஜெயலலிதாவின் முதல் மாடி அறையிலிருந்து நேரே கார்ஷெட்டுக்கு மேலே உள்ள அறைக்குச் செல்ல  மாடியிலேயே ஒரு பாலம் அமைக்கப்பட்டது. பின்னாளில் அவர் முதல்வரானபின் இதில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டபின் 36, 31 ஏ என இரு இலக்கங்கள் அளிக்கப்பட்டன. பழைய வீட்டின் கிழக்குத்திசையில் 31 ஏ என இலக்கம் குறிப்பிடப்பட்ட பகுதி 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 5 மாடிகள் உண்டு 

ஜெயலலிதா தலைமையேற்றிருந்த கட்சி சர்ச்சைக்குள்ளாகி பரபரத்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்போது அவர் வாழ்ந்து மறைந்த அவரது இல்லமும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறது. இப்போதைக்கு இது முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. 

Chandran Veerasamy

Leave a Reply