பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பமுணுகம பொலிஸ் நிலையத்திற்கு இன்று கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க, 5 அடி 3 அங்குலம் உயரமுடைய ஒரு ஆண் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரை அடையாளம் காண்பதற்காகப் பொலிஸார் அவரது உடலமைப்பு மற்றும் உடைகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்:
தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டுள்ளதுடன் பச்சை நிற டி-ஷர்ட் மற்றும் நீலம், வெள்ளை நிறங்கள் கலந்த சாரம் அணிந்துள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது மேலதிக பரிசோதனைகளுக்காகவும், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காகவும் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார்? அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் பமுணுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நபர் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


