TamilsGuide

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை

பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். 

இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது. நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது. 

இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர். எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். 

மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார். நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை. என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது? 

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு! "

- 1966ல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில். 

Leave a comment

Comment