எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையினால் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்களுக்கு உள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையானது இந்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், அத்துறைகளை முகாமைத்துவம் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராய்ந்ததுடன், அதற்குரிய திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு இதன்போது ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.
டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளின் போது ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டது போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் முகாமைத்துவம் செய்ய முடியும் என்பதையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முறையான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


