TamilsGuide

பாரதிராஜா என்றும் நம்முடன் இருப்பார். உடல் மட்டும் இன்றோடு நம்மை நீங்கிவிடும் !

பார்ப்பனர் பிடியிலிருந்த திரையுலகில் கருப்பர்களின் பேரரசை நிறுவியவர் பாரதிராஜா !

நாளை எந்தக் காட்சியை படமாக்குவது என்கிற ஆலோசனை முடிந்து, பாரதிராஜா கிளம்பிவிட, ஆர்.செல்வராஜ் நெடுநேரம் எழுதிக் கொண்டிருப்பாராம். மறுநாள் சூட்டிங் வரும்போது, பேப்பர் கத்தைகளை on the spot வாங்கிப் படிப்பவர், பல தாள்களில் பேனாவால் குறுக்கே கோடிழுத்து, இது வேணாம், அது தேவையில்லை என்று சில தாள்களை மட்டுமே தேர்வு செய்து இவைகளை மட்டும் பேசச் செய் போ, எனப் பணிப்பாராம் பாரதிராஜா !

எழுதியவருக்கு கொஞ்சம் அயர்ச்சியாய், நிரம்ப அதிர்ச்சியாய் இருக்குமாம்.

ஆனால் காட்சியாக்கியபின், அவரெழுதிய எழுத்துக்களை விஞ்சி ஒவ்வொரு ஃபிரேம்களிலும் ஹைக்கூ படைத்திருப்பாராம் பாரதிராஜா. பின், பின்னணி இசையில் ராஜாவும் கைகோர்க்க, அவரெழுத்து அத்தனையும் காவியமாகி விடுமாம்.

இது கரு.பழனியப்பன் ஒருமுறை சொன்னது.

பாரதிராஜா புகழ்பாட, 16 வயதினிலே படமொன்றே போதுமென்றாலும், அடுத்தடுத்து அவர் படங்கள் சாதனைகளைப் படைக்க, வெகுண்ட கூட்டமொன்று, கிராமத்தைத் தாண்டி இவருக்கென்ன எடுக்கத் தெரியுமென்றபோது, அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு இயக்கிய படம் சிகப்பு ரோஜாக்கள்.

சப்பாணி கமலுக்கும், இந்தக் கமலுக்குமான வித்தியாசங்கள் மட்டுமே 1000.

சப்பாணியை விட நடிப்பில் உண்மையான உச்சத்தை கமல் இதில்தான் தொட்டிருந்தார். அந்தளவு அவரை நுட்பமாக இயக்கியிருந்தார் பாரதிராஜா !

சப்பாணியை எவ்வளவுக்கெவ்வளவு அலங்கோலமாக காட்டியிருந்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அழகாக, ஒயிலாக, கமலை இதில் காட்டியிருந்தார் பாரதிராஜா !

இதைக்காட்டிலும் டிக் டிக் டிக் படத்தில் இன்னும் அழகாக வெளிப்பட்டிருந்தார் கமல்.

அதெல்லாம் பாரதிராஜாவின் பொற்காலம்.

அவர் எதைத் தொட்டாலும் அது பொன்னானது.

எம் ஜி ஆர் ஆட்சி தொடங்கிய போதுதான் பாரதிராஜாவும் உள்ளே வந்தார் என்பதால் அவர் முழுக்க எம் ஜி ஆர் பிரியர். ஆனால் இவருடைய படைப்புப் புரட்சியினால் கலைஞர் மிகவும் ரசித்துப் பாராட்டிய கலைஞன் பாரதிராஜா.

அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு, மதம் கடந்த அந்தக் காதல் கதையை வெகுவாக வியந்து பாராட்டி கலைஞர் எழுதிவிட, கூட்டம் கூட்டமாக உ.பிக்கள் படத்திற்குப் போய் வந்தது வரலாறு !

பாரதிராஜாவை நான் அதிகம் நேசித்தது பொம்மலாட்டம் படத்தில் நானா கதாபாத்திரத்தில்தான். அதில் நானாவாக பாரதிராஜாவே அதிகம் வெளிப்பட்டிருப்பார். நானாவின் தீவிர ரசிகன் என்பதால், பாரதிராஜாவை மேலும் வியப்போடு பார்க்க அந்தப் பாத்திரம் உதவியது !

பாரதிராஜா நிலைத்து நின்றதால் அவரிடமிருந்து பலர் வெளிவந்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் பலப்பல அரிய படைப்புகள் கிட்டின. அதனால்தான் அவர் இயக்குனர்களுள் இமயமானார் !!
Prabu Shanmugam
 

Leave a comment

Comment