TamilsGuide

தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். பதவி ஏற்ற நாள் 

தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். பதவி ஏற்ற நாள் இன்று ஜீன்_9 
17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது.
மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.
முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பதவி ஏற்றதும், புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் 
கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நெடுஞ்செழியன் (நிதி) 
2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 
3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 
4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 
5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 
6. அரங்கநாயகம் (கல்வி) 
7. காளிமுத்து (விவசாயம்) 
8. பொன்னையன் (சட்டம்) 
9. குழந்தைவேலு (ஊராட்சி) 
10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 
11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 
12. ராஜா முகமது (கூட்டுறவு) 
13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 
14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 
15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 
17. கோமதி (சமூக நலம்)
ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் புரட்சித்தலைவர்  எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.
உடனே புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் காலைத்தொட்டு கும்பிட்டு புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார்.
விழாவுக்கு புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மேல்-சபைத் தலைவர் ம.பொ.சி. மற்றும் நீதிபதிகள், அனைத்துக்கட்சி தலைவர்கள் வந்து இருந்தார்கள். புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் அண்ணா சாலைக்குச் சென்று பெரியார் சிலைக்கும் பின்னர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
அண்ணா சிலை அருகே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேடையில் ஏறி புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:-
அமரர் அண்ணா சொன்னதுபோல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் உங்கள் முன்னால் தொண்டர்களாகிய நானும் என் நண்பர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் அமைந்த தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள் மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளிக்கின்றோம்.
1) தேர்தலின்போது அ.தி.மு.க.வின் சார்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம். 
2) வறுமை கோட்டின் கீழே உள்ள மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவோம். 

3) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களை காப்பாற்றி அவர்களை மேம்படுத்த பாடுபடுவோம். 
4) சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளும், நலன்களும் எல்லா வகையிலும் காப்பாற்றப்படும். 
5) விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியோரின் உரிமைகளும், நலன்களும் பேணப்படும்.
அண்ணாவின் கொள்கைகள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையான தமிழ் மொழி ஆக்கம், தமிழர் உணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு, மாநில உரிமைகள், ஏழை-எளிய மக்களின் ஏற்றம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை, சாதி மத வேறுபாடற்ற முறையில் அனைவருக்கும் வாழ்வளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி அளிக்கிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி நல்லுணர்வோடு அரவணைத்து அன்புடன் பாதுகாப்பு கொடுப்போம். எங்களை வாழவைக்கும் தெய்வங்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர் கூறினார். 

 

#MGR
 

Leave a comment

Comment