TamilsGuide

உலகளாவிய எல்-நினோ அச்சுறுத்தல் - விவசாயம் மற்றும் குடிநீரைப் பாதுகாக்க அரசாங்கம் அவசரத் திட்டம்

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய ‘எல்-நினோ’ (El-Niño) காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது மற்றும் அதற்கான தற்காப்பு ஆயத்தங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டமொன்று நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் இந்த விசேட கூட்டம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் நாட்டின் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சிறுபோக விவசாயப் பணிகளுக்குத் தேவையான நீரை இப்போதிருந்தே நீர்த்தேக்கங்களில் முறையாகச் சேமித்து வைப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

வறட்சி ஏற்படின் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தைப் பாதுகாப்பது குறித்துப் பேசப்பட்டதுடன், இது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் உடனடியாக வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் தீர்க்கமாக ஆராய்வதற்காக, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான முறையான திட்டங்களைத் தயாரித்து அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் கட்டளையிட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“டித்வா (Ditwa) சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களுக்கு நாம் வெற்றிகரமாக முகம்கொடுத்ததைப் போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய காலநிலை மாற்றத்தையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றன.” எனச் சுட்டிக்காட்டினர்.

இயற்கை அனர்த்தங்களை ஒருபோதும் முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க முடியாது என்பதால், ஏற்படக்கூடிய எந்தவொரு வறட்சி அல்லது நெருக்கடி சூழ்நிலைக்கும் முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுப்பது காலத்தின் கட்டாயம் என அமைச்சர் வசந்த சமரசிங்க இங்கு மேலும் வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment