ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.
ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு, நேற்று காலை இஸ்ரேலை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகள் மற்றும் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டதுடன், அதற்கு பதிலடியாக நேற்று இரவு இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் சில பகுதிகளை குறிவைத்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, ஈரான் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களால் இஸ்ரேலில் உள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடுத்து, சர்வதேச சமூகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.


