தலைவாரும் சீப்பை ஒழித்து வைத்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் எனச் சொல்லும் பிரபலமான நகைச்சுவை வசனம் ஒன்று உள்ளது. மேற்குலக நாடுகள் ஒருசிலவற்றின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அந்த வசனமே ஞாபகத்துக்கு வருகின்றது.
அமெரிக்காவில் வசிக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களும், கருத்தியலாளர்களுமான செங் உயிகுர் மற்றும் ஹசன் பைக்கர் ஆகியோர் பிரித்தானியாவில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில், இறுதி நேரத்தில் அவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் தொடர்பாக இவர்கள் தெரிவித்துவரும் கருத்துகளின் அடிப்படையிலேயே இருவருக்குமான நுழைவிசைவு மறுக்கப்பட்டதாக பிரித்தானிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
56 வயதான செங் உயிகுர் துருக்கியில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர் ஒரு சட்டத்தரணி. இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான இவர் 'இளம் துருக்கியர்' என்ற ஊடக நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர். 31 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தனது ஊடகத்தில் அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் விவாதங்களையும் நடத்தி வருபவர்.
உயிகுர் அவர்களின் மருமகனான 34 வயது நிரம்பிய பைக்கர், ஹசன் அபி என்ற பெயரில் அறியப்படுபவர். நியூ ஜேர்சியில் பிறந்த அவர் 'டுவிட்ச்' எனப்படும் சமூக ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பாளராகப் பணியாற்றி வருவதுடன் இடதுசாரி அரசியல் விமர்சகராகவும் அறியப்படுகின்றார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய நாசகார யுத்தம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வரும் இவர்கள் பிரித்தானியாவில் யூன் நாலாம் திகதி நடைபெறும் SXSW நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தர இருந்த வேளையில், இறுதி நேரத்தில் இவர்களுக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
'தெற்கு மூலம் தென்மேற்கு' என்ற அர்த்தத்துடன் செயற்பட்டுவரும் இந்த அமைப்பு 1987ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. வருடம் தோறும் திரைப்பட விழாக்களையும், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளையும் பல்வேறு நாடுகளிலும் இந்த அமைப்பு நடத்தி வருகின்றது. அந்த வரிசையில் இத்தகைய ஒரு நிகழ்ச்சி லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் உயிகுர் மற்றும் பைக்கர் ஆகியோர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். அது மாத்திரமன்றி லண்டனில் உள்ள பல்கலைக் கழகங்களில் அவர்கள் உரையாற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களின் வருகையை ஒட்டி அவர்களுக்கான நுழைவிசைவு அனுமதி ஏலவே வழங்கப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அது ரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இஸ்ரேல் அரசாங்கம் வழங்கிய அழுத்தம் காரணமாகவே தாங்கள் லண்டன் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக உயிகுர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்துக்காக ஆதரவாக பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் கடுமையான முயற்சிகளை எடுத்துவரும் நிலையிலேயே இவர்கள் இருவருக்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் இஸ்ரேலிய ஆதரவுப் போக்கையும், பலஸ்தீனத்துக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் தெளிவாக உணர்த்துவதாக பொதுவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
காசா பிராந்தியத்திலும், தற்போது லெபனானிலும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கொடிய யுத்தத்தையும், அதன் விளைவாக மனித உரிமைகள் மிக மேசமாக மீறப்பட்டு வருவதையும் முழு உலகமுமே அறியும். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் துணை நிற்பதும் இரகசியமான விடயமல்ல. இந்நிலையில், பிரித்தானியாவில் நடைபெறும் பொது நிகழ்வு ஒன்றில் இரண்டு பேர் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதைத் தடுத்து விடுவதால் பிரித்தானிய அரசாங்கமும், அதற்கு அழுத்தம் தரும் இஸ்ரேல் அரசாங்கமும் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. இத்தகைய செயற்பாடுகள் தீக்கோழி தன்னுடைய தலையை மண்ணில் புதைப்பதற்கு ஒப்பானதே.
இந்தச் சம்பவம் ஒன்றும் உலக வரலாற்றில் நிகழும் முதலாவது சம்பவமல்ல. வரலாறு நெடுகிலும் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. தகவல் தொழில் நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துள்ள இன்றைய உலகில் நாடு விட்டு நாடு வந்துதான் ஒருவர் தனது கருத்தைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற தேவையில்லை. இணைய வசதி ஊடாகவே பெருங் கூட்டத்தோடு இலகுவாக உரையாடிவிட முடியும். ஆனால், அதனைக் கூடத் தடுத்துவிடக் கூடிய வல்லமை அரசாங்கங்களுக்கு உண்டு என்பதை மறைப்பதற்கில்லை.
ஒரு தனிநபரின் அல்லது கூட்டத்தினரின் கருத்துக்களை இவ்வாறு தடுத்துவிட அல்லது கட்டுப்படுத்திவிட முயலும் அரசாங்கங்களின் போக்கு மிகமிக ஆபத்தானது. இது அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. கருத்துச் சுதந்திரத்தை விரும்பும், கருத்து வெளியிடும் உரிமையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய விடயம் இது. ஆனால், துர்வாய்ப்பாக இத்தகைய கண்டனங்களின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதைக் காண முடிகின்றது. கண்டனங்கள் வெளியிடுவதில் கூட பாரபட்சம் கடைப்பிடிக்கப்படுவதைக் காண முடிகின்றது. தனிநபர்கள் மாத்திரமன்றி, மனித உரிமைகளுக்காகக் குரல்தரும் பொது நிறுவனங்கள் கூட இதில் விதிவிலக்காக இல்லை என்பது பேரவலம்.
சிறிய விடயத்தைக் கூட, ஊதிப் பெருப்பித்துவிடும் ஊடகங்கள் கூட இந்த விடயத்தில் கண்டும் காணாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. பக்கச் சார்பாக நடப்பது ஊடக தர்மத்துக்கு எதிரானது என வாய் கிழியப் பேசும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கூட மௌனமாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது. இன்று அவர்களுக்காகக் குரல் எழுப்ப முன்வராது போனால், நாளை நமக்காகக் குரல் தர யாரும் இருக்கப் போவதில்லை என்ற புரிதல் கூட அத்தகையோரிடம் இல்லை என்பது கவலைதரும் விடயம்.
ஜனநாயகக் குரல்களை அடக்குவதில் பிரித்தானிய அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்பதில்லை என்பதற்கு வரலாறு முழுவதிலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சே விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் நடந்துகொண்ட விதம் உலகறிந்த உண்மை. இதில், பழமைவாதக் கட்சி அரசாங்கம் தொழிற்கட்சி அரசாங்கம் என்ற பேதம் எதுவும் இல்லை.
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோன்று ஜனநாயகக் குரல்களை நாடுகளின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. அரசுகளின் அடக்குமுறை வடிவங்கள் மாறிக் கொண்டே இருப்பதுபோல ஜனநாயகக் குரலை எழுப்புவோரும் தமது வடிவங்களை மாற்றிக்கொண்டே இருப்பர் என்பதுவும் நிச்சயம். இந்த உண்மையை அடக்குமுறை அரசாங்கங்களும், அவற்றைப் பின்னால் இருந்து இயக்குவோரும் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு நமக்கு அதனையே கற்றுத் தருகிறது.
சுவிசிலிருந்து சண் தவராஜா


