TamilsGuide

அமெரிக்காவை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்திலுள்ள டோலிடோ நகரில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற கோடைகாலத் திருவிழா ஒன்றிற்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கோரச் சம்பவத்தை அடுத்து தப்பியோடிய "சந்தேக நபர் அல்லது நபர்களை" பொலிஸ் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

டோலிடோ நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் நடைபெற்ற "ஓல்ட் வெஸ்ட் எண்ட் திருவிழா" நிறைவடையும் தருவாயில், அந்நாட்டு நேரப்படி மாலை 5.37 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காயமடைந்த பலரை மீட்டு அவசரச் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 08 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாகவும் டோலிடோ நகர மேயர் வேட் கப்சுகிவிச் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது மக்கள் மரண பயத்தில் அலறியடித்துக் கொண்டும், தப்பியோட முயலும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், சிலர் காயமடைந்த நிலையில் புல்வெளிகளில் சரிந்து கிடக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

நேரடி இசை நிகழ்ச்சிகள், உணவுச் சந்தைகள் மற்றும் பாரம்பரிய இல்லச் சுற்றுப்பயணங்கள் எனப் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றுகூடும் ஒரு பிரம்மாண்டமான இரண்டு நாள் நிகழ்வாக இந்த 'ஓல்ட் வெஸ்ட் எண்ட்' திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கருதப்படும் டெலவெயர் அவென்யூ மற்றும் ராபின்வுட் அவென்யூ சந்திப்பானது, திருவிழாவின் பிரதான இசை மற்றும் உணவுப் பகுதியாகக் காணப்பட்டதால் அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment