TamilsGuide

மேல் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டுக்கள்

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்இ அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களை கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நேற்று (06) கொழும்பு மிலோதா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு சபாநாயகரும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இடம்பெற்றது.

பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் விரைவான சேவையை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த செயல்திறனைப் பதிவு செய்த பிரதேச செயலகங்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டன.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேச செயலகம், கடுவெல பிரதேச செயலகம், கஸ்பேவ பிரதேச செயலகம். என்பனவும் கம்பஹா மாவட்டத்தில் கம்பஹா பிரதேச செயலகம், பியகம பிரதேச செயலகம், மஹர பிரதேச செயலகம் என்பனவும் களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை பிரதேச செயலகம், பேருவளை பிரதேச செயலகம், பண்டாரகம பிரதேச செயலகம் என்பனவும் கௌரவிக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷான் கமேஜே குறிப்பிடுகையில் கொழும்பை மையமாகக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே மக்களின் நிதியமாக மாற்றி அதன் பணிகளை பிரதேச செயலக மட்டத்தில் பரவலாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இப்பணியில் ஜனாதிபதி நிதியத்தின் மக்கள் முகமாக பிரதேச செயலகங்களே மாறியுள்ளதாக சுட்டிக்காட்டிய செயலாளர் இதற்கு முன்னர் ‘முடிந்தால் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்ற ரீதியில் இருந்த ஜனாதிபதி நிதியத்தை ‘நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்’ என்ற அர்த்தத்திற்கு மாற்றுவதற்கு தற்போது முடிந்துள்ளதாகவும் கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

கொழும்பை மையமாகக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியத்தை கிராமத்திற்குக் கொண்டு சென்று பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. 1978 ஆம் ஆண்டு முதல் 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து இயங்கிய ஜனாதிபதி நிதியத்தை கிராமத்திற்குக் கொண்டு செல்வதில் மிகப்பெரிய சேவை அர்ப்பணிப்பு மற்றும் தலையீடுகளை பிரதேச செயலகங்களே செய்தன என்பதைத் கூற வேண்டும்.

அங்குள்ள பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் களப்பணியில் ஈடுபடும் ஏனைய அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய கள அதிகாரிகள் சிறந்த சேவையை ஆற்றினர். இந்த அதிகாரிகள் இப்பணியைச் செய்யும்போது ஒருபோதும் ‘நேரமில்லை’ ‘முடியாது’ என்று கூறவில்லை, தயங்கவுமில்லை. அவர்கள் தடைகளுக்கு மத்தியிலும் இப்பணிகளை மேற்கொண்டனர்.

முதல் வருட இறுதியில் இப்பணி தம்மால் எவ்வளவு சுறுசுறுப்பாகவும் வெற்றிகரமாகவும் செய்யப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்றும் நாங்கள் நினைத்தோம். அந்த நோக்கத்துடன் முதலில் மேல் மாகாணத்தில் இருந்து பாராட்டுக்களைத் தொடங்க நினைத்தோம். அதற்குக் காரணம் கடந்த காலத்தில் விண்ணப்பங்களில் மூன்றில் இரண்டு பங்கு மேல் மாகாணத்தில் இருந்தே வந்தன. இப்பணியில் பிரதேச செயலகங்களே ஜனாதிபதி நிதியத்தின் பொது மக்கள் முகமாகும். இதற்கு முன்னர் ‘முடிந்தால் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்ற நிலையில் இருந்த ஜனாதிபதி நிதியம் 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ‘நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்’ என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு இணையாக ஏனைய மருத்துவ உதவிகளும் ஜூன் மாதம் முதல் பரவலாக்கப்பட்டன.

நீங்கள் இல்லாவிடில்,  ஜனாதிபதி நிதியத்தில் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ள மிகவும் ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கொழும்புக்கு வர வேண்டியிருந்திருக்கும். அனைவரும் சமமாக நடத்தப்படும் ஒரு நிதியமாக இதை மாற்றுவதும் அதன் வெளிப்படைத்தன்மையுமே ஜனாதிபதி நிதியத்தின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்குத் தேவைப்பட்டது. இதற்கு முன்னர் பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கான பின்னணி ஆராயப்படவில்லை. அதேபோல் கடந்த காலத்தில் அந்தஸ்துக்கு ஏற்ப உதவித்தொகை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்கப்பட்டதற்கான உதாரணங்கள் உள்ளன. சில உதவிகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இப்போது அப்படி நடப்பதில்லை. உங்களிடமே இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பணியை மேல் மாகாணத்தில் உள்ள நீங்கள் மிகச்சிறப்பாகச் செய்துள்ளீர்கள். இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களையும் பாராட்ட நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களான எஸ். சி. மாயாதுன்ன, பேராசிரியர் ஜே. ஜயகொடி,உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
 

Leave a comment

Comment