குஷ்புவின் இளைய மகள் அனந்திகா ‘டபுள் ஆக்குபன்சி’ என்ற படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படம் வருகிற 12-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷன் விழா தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் அனந்திகா அளித்த பேட்டியில் முதலமைச்சர் விஜய் குறித்து கூறியதாவது:-
வாரிசு படத்தில் அம்மா நடித்ததால் நான் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்க்க சென்றிருந்தேன். அங்கு செல்லும் முன்பு அம்மா என்னிடம்,"6 மாதத்திற்கு முன்பு விஜய்யை பார்க்க போனோம். அப்போது நீ அவரை பார்த்ததும் அழத் தொடங்கி விட்டாய்.
அதுபோல் அழுது மானத்தை வாங்கிடாதே. இது சூட்டிங் ஸ்பாட்" என சொல்லி அழைத்து சென்றார். நான் தைரியமாக இருப்பேன் என சொல்லி அம்மாவுடன் சென்றேன். ஆனால் விஜய்யை பார்த்ததும் அடுத்த நிமிடம் அழுதுவிட்டேன்.
ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாலும் கோபம் வந்தாலும் அழுது விடுவது என் பழக்கம். அதுபோல் தான் சமீபத்தில் அக்காவின் திருமண பத்திரிக்கை முதலமைச்சர் விஜய்-க்கு வைக்க செல்லும் முன்பு அம்மா, அப்பா இருவரும் நீ அழமாட்டேன் என சத்தியம் செய்துகொடு என கேட்டார்கள்.
அதுபோல் நான் அழவில்லை. எங்களுடைய சந்திப்பு 15 நிமிடம் மட்டும் தான் நடந்தது. அந்த 15 நிமிடமும் நான் அவரை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய அக்கா கொஞ்சம் நிறுத்துறியா? அவர் பயந்து விடப்போறாரு என கூறினார்.
நான் உடனே அக்காவின் பக்கமாக திரும்பி என்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன். விஜய் ரொம்ப இனிமையானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.


