TamilsGuide

உலகப் போரைக் காட்டி அரசு தப்பிக்க முடியாது! - முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சாடல்

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் குறித்து அரசுக்கு முறையான புரிந்துணர்வு உள்ளதா அல்லது இந்த நெருக்கடிகளை அவர்களால் சரியாக நிர்வகிக்க முடிகின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மட்டுமே நம்பி அரசு இயங்கி வருகின்றதே தவிர, நாட்டை மீட்டெடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் எதையும் அது முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தேங்கி நிற்கும் இலங்கையின் பொருளாதாரம் 

நாட்டின் பொருளாதாரம் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நிலையை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், புதிய முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்குள் வரவில்லை என்றும், புதிய திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

"தனியார் துறையின் முதலீடுகள் முடங்கியுள்ளதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போயுள்ளன.

பொதுமக்கள் உணரும் வகையில் எந்தவொரு சாதகமான மாற்றமும் பொருளாதாரத்தில் தெரியவில்லை. மாறாக அரசின் வெற்றுப் பேச்சுக்கள் மட்டுமே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு உலகளாவிய போர்தான் காரணம் என அரசு கூறுவது குறித்துக் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான், போரினால் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்படுவது உண்மைதான் என்றார்.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் கூட போரின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய சூழலைக் காரணம் காட்டி அரசு தனது நிர்வாகத் தோல்விகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

உலகில் இவ்வாறானதொரு போர்ச் சூழல் உருவாகப் போகின்றது என்பது குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று குறிப்பிட்ட அவர், இதனால்தான் கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலேயே வரவிருக்கும் நெருக்கடிகளைச் சரியாக எதிர்கொள்வதற்குத் தேவையான தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு தாங்கள் அரசை வலியுறுத்தியதாகவும் நினைவூட்டினார்.

எனினும், அரசு அதற்குத் தயாராக இருக்கவில்லை என்றும், அவ்வாறு திட்டமிடத் தவறியதன் மோசமான விளைவையே இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவித்து வருகின்றார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.
 

Leave a comment

Comment