நீ இறந்தும் இருப்பவன், சரீரமாக அல்ல சாரீரமாக
பாட்டுச் சுந்தரா!
என் முதல் பாட்டின்
முதல் குரல் நீ
பொன்மாலைப் பொழுதில்
பதிவாகாத
மூன்றாம் சரணத்தையும்
உலக மேடைகளில்
பாடிப் பாடித்
தமிழுக்கு உயரம் தந்தவன் நீ
‘காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்’
என்ற வரிகளில்
பரிகாசத்திற்கு முன்னே
சிருங்காரமாய்ச் சிரித்து
நான் எழுதாத
வார்த்தைகளையும்
எழுதிப் போனவன் நீ
‘சங்கீத ஜாதி முல்லை’
ஒலிப்பதிவில்
பாடிக்கொண்டிருந்தது நீ;
என் கன்னத்தில்
ஓடிக்கொண்டிருந்தது கண்ணீர்
‘காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்
போகிறாய்’ பாடலில்
இசையமைப்பாளன்
இசைக்காத கதறலுக்கு
இசை கூட்டியவன் நீ
‘சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன்’ பாடலில்
‘வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம்
மரணம் கேட்டேன்’
என்று நானெழுத
மேடைகளில் பாடும்போது
மரணம் அமங்கலம் என்று
சரணம் சரணம்
சரணம் கேட்பேன்
என்று பாடியவன் நீ
ஆனால்,
நீ தவிர்த்த மரணம்
உன்னைத் தவிர்க்கத்
தவறிவிட்டதே
நீ மரிக்கவில்லை
என் வீட்டுக்கும்
தோட்டத்துக்குமான
474 கிலோ மீட்டர் பயணத்திலும்
என் பின்னிருக்கையில் அமர்ந்து
இன்னிசை பாடிக்கொண்டே
வருகிறாய்
கொரோனா நோயின்
கொடும் விதிகளால்
உன் மலைபோன்ற உடலுக்கு
மாலை வைக்க முடியவில்லை
அதனால்
இப்போது நான் தூவும்
ஆயிரம் மலர்களும் அழுகின்றன
நீ இறந்தும் இருப்பவன்;
சரீரமாக அல்ல சாரீரமாக


