TamilsGuide

கனடாவில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலி வீடியோவின் உண்மைப் பின்னணி

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கலிடன் பகுதியில் 'பிஷ்னோய்' கும்பலைச் சேர்ந்தவர் பொதுவெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் போலியானது என்று ஒன்டாரியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் 12 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வேகமாகப் பரவியது. அதில், கருப்பு நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடுகிறார். அவரது மற்றொரு கையில் அதிநவீன ரகத் துப்பாக்கியும் இருந்தது.

மே 29ம் திகதி 'எக்ஸ்' (X) தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்த பயனர் ஒருவர், "கனடாவின் கலிடன் பகுதியில் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் பிடிபட்டார்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு 12,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது. தொடர்ந்து மே 31 அன்று அதே நபர் காடுகளுக்குள் துப்பாக்கியால் சுடும் மற்றொரு வீடியோவைப் பகிர்ந்த அதே நபர், அது கலிடனில் உள்ள டெர்ரா கோட்டா சுற்றுலாத் தலம் என்று குறிப்பிட்டிருந்தார்.

'பீப்பிள்ஸ் பார்ட்டி ஆஃப் கனடா' கட்சியின் தலைவர் மாக்சிம் பெர்னியர் உட்படப் பல அரசியல் தலைவர்களும் இந்த வீடியோவை உண்மை என நம்பிப் பகிர்ந்து, குடியேற்றக் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசியிருந்தனர்.

இந்த வீடியோ கனடா மற்றும் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியதை அடுத்து, ஒன்டாரியோ மாகாண காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது.

அதன் முடிவில் காவல்துறை விடுத்துள்ள எக்ஸ் பதிவில், "எங்களது குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வின்படி, இந்த வீடியோ கலிடனிலோ அல்லது ஒன்டாரியோவின் வேறு எந்தப் பகுதியிலோ, ஏன் கனடாவிலேயே எடுக்கப்பட்டது அல்ல. இது அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெளிவுபடுத்தியுள்ளது. 
 

Leave a comment

Comment