சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் 18 வயதான யான்சி என்ற இளம்பெண்.
இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாகச் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தோழமையாகப் பழகி வந்துள்ளார்.
தனது தோழியைப் பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவு நேரத்தில் கோயம்பேட்டில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்குச் (Pub) சென்றுள்ளார்.
அங்கு அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் மற்றும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் விடுதியின் பாதுகாவலர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
விடுதியை விட்டு வெளியேறிய பின்னர் யான்சி மற்றும் அவருடன் வந்த 17 வயது சிறுமி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர்.
இதன்போது , அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட பாலகுரு மற்றும் சுமன் சக்திவேல் உள்ளிட்ட குழுவினர், தங்களது காரால் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இலங்கை அகதிப் பெண் யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்த 17 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சுயநினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியும், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் , இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உட்பட 7 பேரைக் கைது செய்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கொலையாளிகளின் காரில் முன்னணி அரசியல் கட்சி ஒன்றின் கொடி கட்டப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
மோதலின் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் அதேவேளை, சம்பவம் நிகழ்வதற்குக் காரணமான அந்த குறிப்பிட்ட கேளிக்கை விடுதிக்கு (Pub) அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர்.


