உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீது ரஷ்யா நேற்று நள்ளிரவு பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அண்மையில் எச்சரித்திருந்த நிலையில், இந்த பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் பல கட்டிடங்களும் குடியிருப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அவற்றின் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த கீவ் பிராந்திய ஆளுநர் மிகோலா கலாஷ்னிக், “எங்களுடைய அமைதியான நகரங்களும் கிராமங்களும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
கீவ் நகரில் மட்டும் குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களால் பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவசரகால தங்குமிடங்கள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்யா – உக்ரைன் போர் நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


