TamilsGuide

சுந்தரா கொஞ்சம் டயம் கொடு…அப்புறம் சூட் பண்ணிக்கலாம்…

பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை  ஓடவிட்டார் உதவி இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல… இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக  பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி  படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு…அப்புறம் சூட் பண்ணிக்கலாம்…”

எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம்  “என்னண்ணே ஏதாவது பிரச்னையா…சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா…? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்.. இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறி யிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்… காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.  உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர்தான்  டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.! கவுரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா…  கண்ணா நீயும் நானுமா…” என்ற அந்த பாடலை யாரால் மறக்க முடியும்.

- பிரசாந்த்த குமார் 
https://youtu.be/Vb85AOWRpFc
 

Leave a comment

Comment