பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு
இலங்கை
பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று இதுவரை திரும்பாத நான்கு மீனவர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான தேடுதல் எல்லை, இந்திய அரசின் அனுமதியுடன் இந்தியக் கடல் பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். கடற்படையினர் ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தேடி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வௌியிட்டார்.
இதற்காக இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்துப் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில்,
பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் காணாமல் போன நாள் முதல் இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது தேடுதல் பரப்பை விரிவுபடுத்தி, இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேடுவதற்கு இந்திய அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களின் படகுகளில் உள்ள ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்பம் ஊடாக அவர்கள் இருக்கும் இடத்தை அறியக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சிக்னல் குறைபாடு காரணமாக படகுகள் இருக்கும் இடத்தை இதுவரை துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.
கடற்பரப்பில் பரந்தளவில் தேடுதல்களை முன்னெடுப்பதற்காக, கடற்படையினர் தற்போது அதிநவீன ட்ரோன் (Drone) கருவிகளைப் பயன்படுத்திக் வான்வழியாகவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போன தங்களது உறவுகள் குறித்துக் கடற்றொழிலாளர் குடும்பங்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அரசாங்கமும் கடற்படையும் சர்வதேச ஒத்துழைப்புடன் அவர்களை மீட்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உறுதியளித்துள்ளார்.






















