• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்

இலங்கை

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளில் நுழைந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வல்வெட்டித்துறை மற்றும் உடுப்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே அடுத்தடுத்து இந்தத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றினுள் நள்ளிரவு நுழைந்த திருடர்கள், அங்கிருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருடர்கள் வீட்டின் சமையலறைப் பக்கக் கதவு அல்லது ஜன்னல் ஊடாக மிக நளினமாக வீட்டிற்குள் நுழைந்து, யாருக்கும் தெரியாமல் இப்பணத்தைக் களவாடிச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டு உரிமையாளர் ‘சீட்டுப் பிடிக்கும்’ தொழில் செய்து வருபவர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் சீட்டுப் பணம் கொடுப்பதற்காக, வசூலிக்கப்பட்ட 1 கோடியே 15 இலட்சம் ரூபாயை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளையிலேயே இந்தத் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டை இலக்கு வைத்து அடுத்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டு உரிமையாளர் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த போது, வீட்டின் முன்பக்கக் கதவுகள் திறக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாகச் சந்தேகமடைந்து நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கிருந்த 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பகுதியில் ஒரே இரவில் இடம்பெற்ற இந்த பண மற்றும் நகைக் கொள்ளைகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொள்ளையர்களைக் கண்டறிய மோப்ப நாய்கள் மற்றும் விரல் அடையாள நிபுணர்களின் உதவிகளைப் பெறப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply