TamilsGuide

யாழில் காணி விடுவிப்புக்கு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகரன் மக்களை ஏமாற்ற முயற்சி.. கஜேந்திரகுமார் எம்பி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருக்கின்ற நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டினார்.

நேற்றையதினம் (27) யாழ் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் (26) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் வலி வடக்கு விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர்த்து இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் வலி வடக்கில் இராணுவத்திடம் உள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது கலந்து கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் காணி விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதிலை வழங்கவில்லை .

உயர் பாதுகாப்பு நிலையத்தில் பொதுமக்களின் காணிகளை திருட்டுத்தனமாக அபகரித்து இராணுவ வைத்தியசாலை கட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் மறுந்துவிட்டதாக அறிகிறோம்.

அது மட்டுமல்லாது உயர் பாதுகாப்பு நிலையத்தில் உள்ள பாடசாலை சிறுவர் பூங்கா மற்றும் ஆலயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதும் இராணுவத்தினர் சாதகமான பதில்களை வழங்கவில்லை.

வலி வடக்கு காணிகள் தொடர்பாக குறித்த கலந்துரையாடல் அமைந்த போதும் தமிழ் தேசியம் சார்ந்து இயங்குகின்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்காமல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றமை எமது சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகள் மக்களுக்கே என கூறி மக்களை ஏமாற்றி வருகின்ற நிலையில் இராணுவத்தினர் தமது செயற்பாடுகளில் உறுதியாக இருப்பது இந்த உயர்மட்ட கலந்துரையாடல்களில் முடிவுகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாகும்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உயர் மட்ட கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது உண்மைகளை மூடி மறைத்து தகவல் வழங்கியுள்ளார்.

இராணுவத்தினர் காணி விடுவிப்பு தொடர்பில் உடன்படாத நிலையில் விரைவாக காணி விடுவிப்பு இடம்பெறும் என ஊடகங்களுக்கு கருத்து கூறியிருப்பது மக்களை முட்டாளாக்கும் செயற்பாடாகும்.

இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடக்கின்ற நிலையில் வலிவடக்கில் இராணுவத்திடம் உள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

ஆகவே மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்காது தொடர்ந்தும் இராணுவ கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் வந்த ஜேவிபி தொடர்பில் தமிழ் மக்களை விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
 

Leave a comment

Comment