JCD.பிரபாகர் சொல்கிறார்...
நான் லயோலா கல்லூரி மாணவர் பேரவைச் செயலராக இருந்தபோது,
ஒருநாள்,தாம்பரத்தில் இருந்து வரும் ஒரு மாணவர், தன் ஏழ்மை நிலையைக் கூறி,தனக்கு மதியஉணவு ஏற்பாடு செய்து தரமுடியுமா?என்று கேட்டார். அது பற்றி கல்லூரி முதல்வரிடம் கேட்க, அதற்கான வாய்ப்பு இங்கில்லை எனக் கூறிவிட்டார்.மேலும் இதுபோன்று மதியம் சாப்பிடாமல் இருக்கும் பதினாறு மாணவர்களையும் கண்டறிந்தேன்.
இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை.இதே சிந்தனை. அவர்களுக்கு உணவளிக்க எப்படியாவது ஒரு மதிய உணவுத் திட்டம் துவக்க வேண்டும் எனத் தோன்றியது.நிதி திரட்டும் எண்ணம் வந்தபோது என் மனதில் வந்தவர் புரட்சித் தலைவர் தான். இளங்கன்று பயமறியாது என்பார்களே அதுபோல எப்படியோ தலைவரின் டி.நகர்(மாம்பலம்) ஆபிஸுக்குள் நுழைந்து விட்டேன்.அழைப்பு வந்து உள்ளே சென்றபோது அண்ணன் கே.ஏ.கிருஷ்ணசாமி உடனிருந்தார்.
நடந்ததை விவரமாகக் கூறினேன்.
'நீங்க போனது படிக்கிறதுக்குத் தானே.உங்களுக்கு எதுக்கு இந்த வேலை...' என கே.ஏ.கே அவர்கள் கேட்க, 'நான் மாணவர் பேரவைச் செயலராகச் செயல்படும்போது இதைப்பற்றி கவனிக்காமல், என்னால் எப்படி நிம்மதியாகத் படிக்க முடியும்...' என தரப்பு நியாயங்களைக் கூறலானேன். தலைவர் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டே,"கே.ஏ.கே இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.மிகப் பெரிய எதிர்காலம் இவருக்கு இருக்கிறது" என்றவர், "சபாஷ், நல்ல திட்டம்.உங்களுக்கு பத்தாயிரம் தருகிறேன்" என்றார்.
'அண்ணே பத்தாயிரம் ரூபாய்க்காக நான் வரவில்லை.ஒரு நட்சத்திரக் கலை விழா நடத்தி நிதி சேர்க்க விருப்பப்படுகிறேன். நிகழ்ச்சிக்கு நீங்கள் வரவேண்டும் என்பதற்காகத் தான் வந்தேன்' என்று கூற, "அதற்கென்ன நான் வருகிறேன். விழாவிற்கு ஏற்பாடு செய்யுங்க" என்று கூறிவிட்டார்.
அடுத்தநாள் அந்த பத்தாயிரம் ரூபாயும் வந்தது.சொன்னபடி அந்த நாளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மாலையில் நட்சத்திரக் கலை விழாவும் நடந்தது.அதில் நாங்கள் சேர்த்த நிதியாக முப்பத்தி மூவாயிரம் ரூபாயைச் சேர்த்து வைப்பு நிதியாக வைத்து, அந்த பதினாறு மாணவர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்தார்.அன்று அவர் அன்பொழுக என்னைப பார்த்த பார்வையை என்றும் மறக்க முடியாது.
1984 ல் வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற என்னடைய உதவியாளர் கண்ணையாவின் திருமண நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் பேசும்போது, "எல்லாத் திருமணத்திலும் ஜெசிடி பிரபாகர் எனக்கு வாழ்த்த வயதில்லை என்றே சொல்கிறார்.இன்னும் அவருக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அப்படிச் சொல்கிறார்.இங்கு அவர் பெற்றோர்கள் வந்து இருப்பார்கள் என்று கருதுகிறேன்" என்று சொன்னதும், என் பெற்றோர் எழுந்து நின்றனர்.அவர்களைப் பார்த்து, "நீங்கள் இவருக்குப் பெண் பார்க்கின்றீர்களா அல்லது நான் பார்க்கட்டுமா" என்று அவர் கேட்க,எனது தாயார் நீங்களே பாருங்கள் என சைகையிலேயே சொல்ல, "எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் நான் பிரபாகருக்குத் தான் கொடுத்திருப்பேன்" என்று தலைவர் கூற, எழுந்த பலத்த கரவொலி அடங்க சற்று நேரமானது.
ஒருசமயம், தலைவர் கோட்டையில் அவரது அறைக்கு யாரும் இல்லாத நேரத்தில் வரச் சொல்லி இருந்தார்.சென்றேன்.உட்காருமாறு பலமுறை சொல்லியும் நான் உட்காரவில்லை.சற்று கடுமையாக ஆணையிட்டதும் உட்கார்ந்தேன்.
"உங்களைப் பார்த்து நான் மிகவும் வியப்படைகிறேன்" என பேச ஆரம்பித்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை. "ஒரு பியூன் முதற்கொண்டு ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் வரை யாரைக் கேட்டாலும் உங்களை கண்ணியமானவர் என எல்லோரும் சொல்கிறார்களே, எப்படி இந்த நல்ல பெயரை உங்களால் எடுக்க முடிந்தது?" என்று கேட்டார்.
'உங்களுக்கு எந்தவித கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் விருப்பம்.அது காரணமாக இருக்கலாம்' என நான் கூற,"எது எப்படியோ இந்த நான்காண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பதவி காலத்தில் ஒரு புகார் கூட உங்களைப் பற்றி வரவில்லை என்பது ஆச்சரியம் தானே.இதை சொல்வதற்கான நேரம் இன்று தான் கிடைத்தது" என பாராட்டிய அந்த நாட்களும்,அவர் காருக்கு பின்னால் ஓடிய,அவரைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்த அந்த பழைய நாட்களும் என்றைக்கும் இந்த உள்ளத்தில் நீக்கமற நிறைந்தே இருக்கிறது!


