கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான டன் உணவு வீணாக்கப்படும் அதே வேளையில், நாட்டின் நான்கில் ஒரு பகுதியினர் (சுமார் 24%) போதிய உணவின்றித் தவித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, 'செகண்ட் ஹார்வெஸ்ட்' என்ற தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தேசிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
100 மணி நேரத்தில் நிதி திரட்டுவதை இலக்காகக் கொண்ட இப்போராட்டத்தில், பிரபலங்கள் உட்பட 100 தூதர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இதில் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட், பாடகி ஷானியா ட்வைன் மற்றும் பிரபல செஃப் மேட்டி மேதிசன் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இந்த பிரச்சாரத்தின் மூலம் 10 லட்சம் வேளை உணவிற்கான நிதியைத் திரட்ட இலக்கு வைத்துள்ளோம். வெறும் 1 டாலர் (சுமார் $1) நிதியுதவி அளித்தால், அதன் மூலம் 5 பேருக்கு உணவு வழங்க முடியும்" என்று செகண்ட் ஹார்வெஸ்ட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி லோரி நிக்கல் தெரிவித்துள்ளார். மேலும், "இன்று நடுத்தர வர்க்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது.பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது, ஆனால் அதற்கு ஏற்ப ஊதியம் உயரவில்லை," என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உணவு, எரிபொருள் மற்றும் வீட்டு வாடகை ஆகியவற்றின் அதீத விலையேற்றமே மக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை. எங்கள் உணவு வங்கிக்கு மாதந்தோறும் 5,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர் என பிரின்ஸ் எட்வர்ட் தீவு உணவு வங்கியின் நிர்வாக இயக்குனர் மைக் மக்டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், உதவி தேடி வருபவர்களில் 35 சதவீதம் பேர் வேலைக்குச் செல்பவர்கள். கடினமாக உழைத்தும் அவர்களால் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் ஆண்டுதோறும் 88.3 லட்சம் டன் உண்ணக்கூடிய உணவு வீணாகிறது. இந்த உணவைக் கொண்டு 1.7 கோடி மக்களுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று வேளையும் உணவளிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வீணாகும் உபரி உணவுகளை விவசாயிகளிடமிருந்தும், உணவு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளிடமிருந்தும் 'செகண்ட் ஹார்வெஸ்ட்' அமைப்பு சேகரிக்கிறது. பின்னர், அதனைப் பதப்படுத்தி நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் உருளைக்கிழங்கு, பால், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களாக ஏழை மக்களுக்கு விநியோகம் செய்கிறது.


