TamilsGuide

தர்மேந்திராவின் பத்ம விருதை வாங்கிய ஹேமமாலினி - உருகிய மகள் ஈஷா தியோல்

இந்தியத் திரைத்துறையின் பழம்பெரும் சூப்பர்ஸ்டார் தர்மேந்திராவிற்கு மத்திய அரசு அறிவித்த பத்ம விபூஷன் விருது டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

இச்சிறப்புமிக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து தர்மேந்திராவின் மனைவியும், பிரபல நடிகையுமான ஹேமா மாலினி பத்ம விபூஷன் விருதை முறைப்படி பெற்றுக்கொண்டார்.

விழாவுக்கு தர்மேந்திராவின் மூத்த பிள்ளைகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், விஜிதா, அஜீதா ஆகியோர் சில காரணங்களால் நேரில் வர முடியவில்லை. இதனால், அவர்கள் அனைவரின் சார்பாக தர்மேந்திராவின் இளைய மகள் அஹானா தியோல் தனது தாயாருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதுகுறித்து தர்மேந்திராவின் மூத்த மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மிகவும் பெருமையான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். குடும்பத்தின் சார்பாக எங்கள் அம்மா விருதைப் பெற்றார்.

எங்கள் உடன்பிறப்புகள் 6 பேரின் பிரதிநிதியாக எங்கள் குடும்பத்தின் கடைசி பிள்ளை அஹானா அங்கு நின்று, எங்களுக்காகக் கைதட்டி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

எங்கள் அப்பாவை நாங்கள் அனைவரும் மிஸ் பண்ணுகிறோம். அப்பா உங்களை நினைத்தால் எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தர்மேந்திராவின் முதல் மற்றும் இரண்டாவது மனைவி வழியிலான 6 பிள்ளைகளும் தங்களது தந்தைக்குக் கிடைத்த இந்த மிக உயரிய தேசிய அங்கீகாரத்தைக் கண்டு தங்களின் பெருமையையும், நெகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
 

Leave a comment

Comment