TamilsGuide

கேன்ஸ் விழா 2026 - ஹாலிவுட் படங்களை அறிமுகப்படுத்திய இந்திய தயாரிப்பாளர் சந்தீப் படேல்

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ரிவியரா பகுதியில் நடைபெற்ற 79-வது கேன்ஸ் திரைப்பட விழா உலகளாவிய திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சர்வதேச மேடையில், 'SRHP ஃபிலிம்ஸ்'தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான இந்திய வம்சாவளி தயாரிப்பாளர் சந்தீப் படேல் கலந்து கொண்டு, தனது புதிய ஹாலிவுட் படங்களை உலக விநியோகஸ்தர்கள் மத்தியில் அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்தினார்.

கேன்ஸ் விழாவின் வணிகச் சந்தையான 'மார்ச்சே டு ஃபிலிம்' பகுதியில் சந்தீப் படேல் தயாரிப்பில், ஷ்ரவன் திவாரி இயக்கியுள்ள 'ஹோலி ஃபாதர்' என்ற ஹாலிவுட் ஹாரர்-க்ரைம் த்ரில்லர் படம் முக்கிய பங்கு வகித்தது.

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் ராபர்ட்ஸ் மற்றும் மேரி லைரெட் நடித்துள்ள இப்படம், வரும் 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் உலகளவில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் விழா நிறைவடைந்த அதே வாரத்தில், SRHP ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட ஹாலிவுட் படமான 'சண்டவுன் டவுன்' படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு கடந்த 23-ம் தேதி அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

சந்தீப் படேல் மற்றும் ரீட்டா படேல் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், வரும் 2027-ஆம் ஆண்டில் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் விழாவின் போது இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான சந்தீப் படேல், அதன் துணைத் தலைவர் அதுல் படேலைச் சந்தித்து சர்வதேச விநியோக முறைகள் குறித்துப் பேசினார்.

மேலும், சர்வதேச பிலிம்பேர் விருது பெற்ற புகைப்படக் கலைஞரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணருமான அஷ்வின் போரட், கான்ஸ் விழாவில் படங்களின் சர்வதேச டிஜிட்டல் பிராண்டிங் பணிகளை முன்னின்று நடத்தினார்.

ஹாலிவுட் மட்டுமின்றி இந்திய சந்தையிலும் கால் பதிக்கும் நோக்கில், ஜாக்கி ஷெராஃப் மற்றும் அக்ஷய் ஓபராய் நடிக்கும் 'டூ ஜீரோ ஒன் ஃபோர்' என்ற இந்திப் படத்தையும் ஷ்ரவன் திவாரி இயக்கத்தில் சந்தீப் படேல் தயாரித்துள்ளார். இப்படம் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், அகஸ்டா நகரைச் சேர்ந்த தொழிலதிபரான சந்தீப் படேல், 2016-ல் திரைத்துறையில் நுழைந்து தற்போது ஹாலிவுட் மற்றும் இந்தியத் திரை உலகை இணைக்கும் ஒரு முக்கிய பாலமாக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment