TamilsGuide

அதிகாலையில் சீறிப்பாய்ந்த அதி நவீன ஒரேஷ்னிக் ஏவுகணை - பலர் பலி;100 பேர் காயம் 

உக்ரைன் நாட்டில் ரஷ்யா நேற்று  (24) அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கீவ் தலைநகரின் வான்பரப்பில் ஏவப்பட்ட ரஷ்யாவின் அதி நவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணை அப்பகுதியில் பாரியளவில் தாக்கியுள்ளது.

இது, கடந்த நான்கு வருடப் போரிலேயே மிகக் கடுமையான தாக்குதலாக கருதப்படுகிறது. இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் பாய்ந்து அழிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும் விண்கல் போல மிக அதிக வேகத்தில் பயணிப்பதால் எந்தவொரு வான்பாதுகாப்பு அமைப்பாலும் இதை தடுத்து அழிக்க முடியாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கீவ் தலைநகரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் பிற பகுதிகளும் ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் வெடிப்பு சத்தங்கள் கேட்டவண்ணமிருந்ததாகவும் பெரிய கட்டடங்கள், ஒரு பாடசாலை, ஒரு திரையரங்கு, அருங்காட்சியகம் என்பன இதில் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன், ரஷ்யாவின் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment