• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்!- ரணில்

இலங்கை

தனது ஆட்சி நீடித்திருந்தால் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பை 275 ரூபாவாகக் குறைத்திருக்க முடியும் என  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தனது இல்லத்தில் நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வாகன இறக்குமதி விவகாரங்கள் குறித்து இவ்வாறான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  என் ஆட்சி நீடித்திருந்தால் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பை 275 ரூபாவாகக் குறைத்திருக்க முடியும்.  தற்போதைய ஆட்சியாளர்களால் கூட அதனை ஆகக்குறைந்தது 280 ரூபாக்காவது கொண்டு வந்திருக்க முடியும்.

வரி அதிகரிப்பு

ரூபா வலுவடைந்திருந்தால் தற்போதைய வரி அதிகரிப்பு மக்களுக்கு அந்தளவுக்குப் பெரிய சுமையாகத் தெரிந்திருக்காது. பணவீக்கம் இல்லாததால் ரூபாவின் மதிப்பு நிலைத்திருக்கும்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்படாததால் நாட்டின் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. எனது திட்டம் ரூபாவை மேலும் வலுப்படுத்தி மக்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதாகவே இருந்தது.

தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல் முடிவுக்கு வந்தாலும் கூட, தற்போதைய அரசின் கீழ் நிலைமைகளைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

நாட்டின் பொருளாதார அமைப்புகளை ஒரு வாகனத்தின் தனித்தனி பாகங்களுக்கு ஒப்பிட்டுப் பேசிய அவர், தாம் அவற்றை ஒன்றிணைத்து ஒற்றை வாகனமாக முன்னோக்கிச் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply