மூக்குக் கண்ணாடி பாவனையாளர்களிடம் நூதனமான முறையில் மோசடி - நான்கு பேர் கைது
இலங்கை
சலுகை விலையில் மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதாக உறுதியளித்து, தலவாக்கலை பகுதியில் மூக்குக் கண்ணாடி பாவனையாளர்களிடம் முன்பணம் பெற்றதாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை நகரில் பார்வைக் குறைபாட்டுக்கான பரிசோதனை முகாம் ஒன்றை நடத்தியுள்ள குறித்த நான்கு பேரும், நோயாளிகளிடம் பல்வேறு வகையான வில்லைகள் கொண்ட கண்ணாடிகளைக் காட்டி, அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக முன்பணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.
செலுத்தப்பட்ட முன்பணம்..
பதுளை மற்றும் வெலிமடையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்களிடம், நோயாளிகளின் கண்களைப் பரிசோதிப்பதற்கோ அல்லது வில்லைகள் வழங்குவதற்கோ முறையான அனுமதிகளோ தகுதிகளோ இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் ஒரு கண் மருத்துவரிடம் சிறிது காலம் பணியாற்றியுள்ளதுடன், அவர் துறவறம் பூண்ட பிறகு இந்த மோசடியில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் நிர்வாகப் பொது சுகாதார பரிசோதகர் எஸ். தேவன் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று (24) நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் முன்பணம் பெற்ற அனைவரின் பணத்தையும் திருப்பித் தருமாறு கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி அந்தக் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நால்வர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.






















