TamilsGuide

கனடா சரியான பாதையில் செல்வதாக மக்கள் நம்பிக்கை

கனடா நாடு தற்போது சரியான பாதையை நோக்கிப் பயணிப்பதாக நம்பும் கனடியர்களின் எண்ணிக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதன் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக 'அபகஸ் டேட்டா' நிறுவனத்தின் புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வறிக்கையின்படி, 47 சதவீத மக்கள் கனடா சரியான பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டுள்ள அதேவேளையில், 39 சதவீதத்தினர் மட்டுமே நாடு தவறான பாதையில் செல்வதாகக் கருதுகின்றனர்.

உலக அளவில் நிலவும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், கனடா ஒரு நிலையான நாடாக விளங்குவதாக மக்கள் கருதுவதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

ஏனெனில், 76 சதவீத கனடியர்கள் ஒட்டுமொத்த உலகமும் தவறான பாதையிலேயே செல்வதாகக் கருதுவதுடன், அண்டை நாடான அமெரிக்காவைப் பொறுத்தவரை அது தவறான பாதையில் செல்வதாக நம்புபவர்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆய்வாளர் டேவிட் கொலெட்டோ, உலகிற்குத் தேவையான அனைத்தும் கனடாவிடம் உள்ளதால், உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது கனடாவில் வாழ்வது மிகவும் சிறப்பானது என்பதை பெரும்பான்மையான கனடியர்கள் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறம் தேசப்பற்றாக இருந்தாலும், மறுபுறம் நாட்டில் நிலவும் சாதகமான சூழலுக்கு மக்கள் அளித்துள்ள நியாயமான அங்கீகாரமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது வாழ்வாதாரச் செலவுகள் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற சவால்கள் இருந்தாலும், அதற்குக் கனடியர்கள் தங்களின் அரசாங்கத்தை முழுமையாகக் குற்றம் சுமத்தவில்லை.

உலகளாவிய மோதல்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளே எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணம் என நம்பும் மக்கள், இத்தகைய உலகளாவிய நெருக்கடிகளில் இருந்து தங்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு தலைவராக, 10-ல் 6 பேர் தற்போதைய பிரதமர் மார்க் கார்னியை பார்க்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment