TamilsGuide

ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா அவசரப்படாது - கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு முழுமையான தீர்வைக் காணும் நோக்கில், ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதில் அமெரிக்கா அவசரப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சமூக வலைதளத்தில் (Truth Social) வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா (Barack Obama) தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்றாக இருந்ததாக விமர்சித்துள்ளார்.

அந்த ஒப்பந்தம் ஈரானுக்கு அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்தியதாகவும், தற்போதைய நிர்வாகம் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் அதற்கு முற்றிலும் மாறுபட்டவை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒப்பந்தத்தை அவசரமாக இறுதி செய்ய வேண்டாம் என தனது குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் தொடர்ந்தும் அமலில் இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரானுடனான அமெரிக்காவின் உறவு தற்போது தொழில்முறை மற்றும் பயனுள்ள நிலைக்கு மாறி வருவதாக தெரிவித்துள்ள அவர், ஈரான் எந்தவொரு அணு ஆயுதத்தையோ அல்லது அணு குண்டையோ உருவாக்கவோ, வாங்கவோ முடியாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், Abraham Accords உடன்பாட்டில் இணைந்து ஆதரவு வழங்கிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ட்ரம்ப், எதிர்காலத்தில் ஈரானும் இந்த உடன்பாட்டில் இணைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment