கனடாவின் ஹெலிஃபாக்ஸ் நகரில் அண்மையில் பிரசவித்த நிலையில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தையொன்றை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:40 மணியளவில், உயிராபத்தான நிலையில் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சற்று நேரத்திற்கு முன்னர்தான் ஒரு குழந்தையைப் பிரசவித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர்.
எனினும், அந்தப் பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் இருக்கவில்லை என்பதுடன், தற்போது வரை குழந்தை இருக்கும் இடம் கண்டறியப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எனினும், இதுவரை அவர்கள் மீது முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில், ஹெலிஃபாக்ஸ் பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் இணைந்து 'விலெட் வீதி' (214 Willett Street) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.
விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை மாலை வேளையில், பொலிஸ் தடயவியல் நிபுணர்கள் குறித்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே உள்ள பல குப்பைத் தொட்டிகளை (Dumpsters) தீவிரமாக சோதனையிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தேடுதல் பணியில் ஹெலிஃபாக்ஸ் மீட்புக் குழுவைச் சேர்ந்த 55 பேர் ஈடுபட்டுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்காக 'கொல்செஸ்டர்' (Colchester) மீட்புக் குழுவின் மோப்ப நாய் பிரிவும் களமிறக்கப்பட்டுள்ளது.


