இரு அரசாங்கங்களின் அழைப்பின் பேரில் இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 வரை நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார்.
இந்தப் பயணத்தின் போது அமைச்சர் விஜித ஹேரத், நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
மேலும், அவர் இரு நாடுகளிலும் உள்ள சிரேஷ்ட அரசாங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் இலங்கை சமூகத்தினரையும் சந்திப்பார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து பயணத்தின் ஒரு முக்கிய அம்சம், வெலிங்டனில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தின் சம்பிரதாயத் திறப்பு விழாவிலும் அவர் பங்கெடுப்பார்.
இந்தப் பயணம், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுடனான இலங்கையின் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


