TamilsGuide

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்

ஒன்பது நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இலங்கை ரூபாய் கடந்த வெள்ளிக்கிழமை (22) அன்று அமெரிக்க டொலருக்கு எதிராக உயர்ந்து, ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக உருவெடுத்தது.

வெள்ளிக்கிழமை அன்று மூன்றாண்டு காலத்திற்குச் சரிந்த இழப்புகளை மாற்றி, ரூபாய் 2.7% வரை வலுப்பெற்றது. 

இது மார்ச் 2023-க்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து வரவிருக்கும் நிதி வரவுகளுக்கு முன்னதாக, சில சந்தை பங்கேற்பாளர்கள் டொலர்களை விற்க முடிவு செய்ததன் காரணமாகவே வெள்ளிக்கிழமை ரூபாய் வலுப்பெற்றிருக்கலாம் என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் நாணயத்தை நிலைப்படுத்துவதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து சமிக்ஞை அளித்து வருகின்றனர். 

அரசாங்கம் ஏற்கனவே தனியார் வாகனங்கள் மீது இறக்குமதி வரி கூடுதல் கட்டணத்தை விதித்துள்ள நிலையில், நாணயச் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த தலையிடுவதாக மத்திய வங்கி முன்னர் கூறியிருந்தது.

ஈரான் போரினால் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியின் காரணமாக ஆசியா முழுவதும் உள்ள நாணயங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. 

இந்த ஆண்டில் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயங்களுள் ஒன்றாக இலங்கை ரூபாய் விளங்குகிறது.

இறக்குமதியாளர்கள் அதிக டொலர்களை வாங்குவதாலும், ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் உள்ள வெளிநாட்டு நாணய இருப்பை மாற்றுவதைத் தாமதப்படுத்துவதாலும், நாணயத்தின் பெறுமதி மேலும் பலவீனமடையும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் மத்திய வங்கி நிதி நிலைத்தன்மையைப் பேணுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இதனிடையே, நாட்டின் மத்திய வங்கி மே 26 அன்று தனது வட்டி விகித முடிவை அறிவிக்க உள்ளது. 

ப்ளூம்பெர்க் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கின்றனர். 

பணவியல் இறுக்கமும், எதிர்பார்க்கப்படும் பணவரவும் ரூபாயை நிலைப்படுத்தவும் அதன் மதிப்பை அதிகரிக்கவும் உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

Leave a comment

Comment