TamilsGuide

நுகர்வோருக்கு எச்சரிக்கை - இயற்கை உணவுகளை தேர்ந்தெடுக்க ஆய்வாளர்கள் அறிவுரை

பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில், கடைகளில் விற்கப்படும் பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பொதுவான பாதுகாப்பான்கள் (Preservatives) மனிதர்களின் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்கத்தைத் தடுக்கும் வகையில் உணவுகளில் சேர்க்கப்படும் பாதுகாப்பான்கள் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கிறது.

நுகர்வோருக்கு எச்சரிக்கை ; இயற்கை உணவுகளை தேர்ந்தெடுக்க ஆய்வாளர்கள் அறிவுரை | Researchers Advise Consumers Choose Natural Foods

ஆய்வின் படி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் சுமார் 29% வரை அதிகரிக்கலாம் என்றும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயம் 16% வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவுகளின் நிற மாற்றத்தைத் தடுக்க பயன்படுத்தப்படும் சிட்ரிக் அமிலம் (Citric acid) மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) போன்ற “இயற்கையானது” என கருதப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதுகாப்பான்களும் கூட, உயர் இரத்த அழுத்த அபாயத்தை சுமார் 22% வரை அதிகரிக்கக்கூடும் என ஆய்வு கூறுகிறது.

பிரான்சின் NutriNet-Santé திட்டத்தின் கீழ் 2009 முதல் 15 வயதுக்கு மேற்பட்ட 1,12,000க்கும் அதிகமான தன்னார்வலர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 58 வகையான உணவுப் பாதுகாப்பான்களின் தாக்கம் ஆய்வு செய்யப்பட்டதில், வைட்டமின் C உட்பட எட்டு முக்கிய சேர்க்கைப் பொருட்கள் நேரடியாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள், தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மட்டுமல்லாமல் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல உணவுகளிலும் இத்தகைய சேர்க்கைகள் உள்ளதால், நுகர்வோர் முடிந்தவரை புதிய மற்றும் இயற்கையான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment