TamilsGuide

கனடா விமான நிலையங்களில் பெரும் முறைகேடு - அதிர்ச்சித் தகவல்கள் வெளியீடு

கனடிய விமான நிலையங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும், கனடாவிலிருந்து விமானம் ஏறிய குறைந்தது 17 அப்பாவி பயணிகள், தங்களது பைகளில் ஒட்டப்பட்டிருந்த 'பயணச்சீட்டு அடையாள அட்டை' (Bag Tags) மாற்றப்பட்டதால், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழல்வாதிகளான சில ஊழியர்கள் இந்தச் சதியில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிக்கும் ஒரு அப்பாவியின் லக்கேஜ் பையில் இருக்கும் அடையாள அட்டையை (Tag) ஊழியர்கள் ரகசியமாகப் பிரித்தெடுக்கின்றனர்.

பின்னர், போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் அந்த அப்பாவியின் அடையாள அட்டையை ஒட்டி விடுகின்றனர்.

டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் 3,000 பாதுகாப்பு கேமராக்கள் இருந்தாலும், சில தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கேமராக்கள் இல்லாத 'பிளைண்ட் ஸ்பாட்களை' (Blind Spots) பயன்படுத்தி சில நொடிகளில் இந்தச் சதி அரங்கேற்றப்படுகிறது.

இந்த போதைப்பொருள் பை இலக்கு நாட்டை அடைந்ததும், அங்குள்ள கடத்தல் கும்பல் அதை எடுத்துக்கொள்ளும். ஒருவேளை அது அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால், அந்தப் பையில் யாருடைய பெயர் இருக்கிறதோ அந்த அப்பாவி பயணி பழிவாங்கப்படுவார்.

நீதிமன்றப் பதிவுகள், காவல்துறை தரவுகள் மூலம் W5 குழு திரட்டிய தகவல்களின்படி, கனடாவிலிருந்து டொமினிகன் குடியரசு, பாரிஸ், ஜெர்மனி, மொராக்கோ, பெர்முடா, பிலிப்பைன்ஸ் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற விமானங்களிலேயே இந்த மோசடிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

இதில் சில நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி தொடர்பாக, டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய 6 ஊழியர்களை கனடிய பொலிஸார் கடந்த ஆண்டில் கைது செய்துள்ளனர். 
 

Leave a comment

Comment