TamilsGuide

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/2026 தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இச்சுற்றறிக்கையின் கீழ் தற்காலிக, பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேவையில் இணைக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான தகுதித் தினமாக 2019.09.01 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அதற்குப் பின்னரும் பல திணைக்களங்களின் தேவைக்கிணங்க ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், நிரந்தர நியமனத்திற்கு தகுதிபெறும் கால எல்லையை 2025.01.01 வரை நீடித்து, 2019.09.01க்கு பின்னர் சேவையில் இணைக்கப்பட்ட ஊழியர்களையும் சுற்றறிக்கைக்குள் உள்வாங்கி நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றிவரும் இவ்வூழியர்கள் கடுமையான பொருளாதார சிரமங்களையும் எதிர்கால ஓய்வூதிய பாதுகாப்பின்மையையும் எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்த நிலையில் நிரந்தர நியமனம் இன்றி நீண்டகாலம் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை அவர்களை பெரிதும் பாதித்துள்ளதாக சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது வரவு-செலவுத் திட்ட உரையிலும் கருத்து வெளியிட்டிருந்தார் என்பதையும் சங்கம் நினைவூட்டியுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.சந்தன அபேரத்ன ஆகியோருக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
 

Leave a comment

Comment