விநியோகஸ்தர்களின் பொக்கிஷமாக கொண்டாடப்படும் ரகசிய போலீஸ் 115
சினிமா
1968 ஜன 11 என்றதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது "ரகசிய போலீஸ் 115" தான். மிகுந்த எதிர்பார்ப்போடு பத்மினி பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளிவந்த தலைவர் நடித்த மூன்றாவது மாபெரும் வெற்றிப் படம்தான் "ரகசிய போலீஸ் 115". "காவல்காரன்" "விவசாயி" ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப்பின் வந்த படம்.
படத்தின் வால்போஸ்டரை பார்க்கவே தியேட்டரின் வாசலில் மாபெரும் கூட்டம் தினசரி வந்து போனது. தலைவரின் ரசிகர்கள் சினிமாவில் தீவிரமாக இருந்த போது வந்து வசூலை வாரி குவித்த படம். தூத்துக்குடியில் ப்ளாக்டிக்கெட் கொடி கட்டி பறந்தது இந்தப்படத்திலிருந்துதான். தியேட்டர் நிர்வாகமே ப்ளாக்கில் டிக்கெட் விற்க தொடங்கிய நேரம்.
ஒரு காட்சிக்கு சுமார் 1000 டிக்கெட்கள் கொடுப்பார்கள். அதில் 300 டிக்கெட்டை தவிர மீதி அனைத்தையும் ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர் மந்திரம் என்பவருக்கு கமிஷன் அடிப்படையில் கொடுத்து விடுவார்கள். ஒரு டிக்கெட்டுக்கு 50 பைசா கமிஷன் கொடுப்பார்கள்.
மந்திரத்திடம் ஒரு 10 பேர் வேலை பார்ப்பார்கள். தியேட்டர் நிர்வாகத்திடம் பெற்ற டிக்கெட்டை இவர்கள் ப்ளாக்கில் விற்று கமிஷனை எடுத்துக்கொண்டு மீதத்தை தியேட்டர் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்.
ஒரு டிக்கெட் 5ரூ என்று விற்பனை நடக்கும். டிக்கெட் ஸ்டாக் குறைய குறைய ரேட் கூடிக்கொண்டே போகும். "ரகசிய போலீஸு"க்கு ஒரு டிக்கெட் அதிகபட்சமாக ரூ 20 வரை விற்கப்பட்டது. ஒரு டிக்கெட் 5ரூ என்றால் 700 டிக்கெட் சுமார் 3500 ரூ வரை கிடைக்கும். ஹவுஸ்புல் ஆனால் கூட ரூ 800 க்கு மேல் கிடைக்காது.
இதில் கமிஷன் மற்ற செலவுகள் போக ஒரு காட்சிக்கு குறைந்த பட்சம் ரூ3000 வரை பார்ப்பார்கள்.
படம் திரையிடப்பட்ட முதல் 6 நாட்கள் குறைந்த பட்சம் 4 காட்சிகளும் அதற்கு மேலும் நடைபெற்றது. ஒரு நாள் ப்ளாக் டிக்கெட் வருமானம் 12000ரூ. அப்படியானால் 6 நாட்களுக்கு ப்ளாக் டிக்கெட் வருமானம் ரூ72000. இந்த வருமானத்தின் பெரும்பகுதி தியேட்டர் ஓனருக்கும் அதில் சிறு பகுதி விநியோகஸ்தர் ரெப்புக்கும்
கிடைக்கும். இது முதல் 6 நாட்கள் மட்டும் மீண்டும் தொடர்ச்சியாக டிக்கெட் ப்ளாக்கில் கூட்டத்தின் அடிப்படையில் ரேட் நிர்ணயம் பண்ணி விற்பார்கள்.
இந்த லாபமானது திருநெல்வேலியில் படம் 100 நாட்கள் ஓடினால் கூட தியேட்டர் ஷேர் இவ்வளவு கிடைக்காது. மதுரை தங்கத்தில் கூட முதல்வார வசூல் அதிக பட்சமாக சுமார் 50000ரூ தாண்டும். இந்தப்பணத்தை தியேட்டர் நிர்வாகம் பங்குத்தொகையாக பெற சுமார் 5 வாரங்கள் முதல் 50 நாட்கள் வரை ஆகும். ஆனால் தூத்துக்குடியில் இவ்வளவு லாபம் அடைந்தாலும் தியேட்டரின் எந்தவித அடிப்படை வசதி, கழிவறை உட்பட, படுமோசமாக இருக்கும்.
இந்த லாபத்தில் கணிசமான பகுதி கமர்ஷியல் டாக்ஸ் அதிகாரிகளுக்கு போய் விடும். தியேட்டரில் எந்த செக்கிங்கும் இருக்காது. யார் என்ன புகார் கொடுத்தாலும் வரி அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். வெளியூரிலிருந்து அதிகாரிகள் ரெய்டு வரும் போது உள்ளூர் கைக்கூலி அதிகாரிகள் முன்னமே சொல்லி விடுவார்கள்.
அன்றைய தினம் ஒரு காட்சி மட்டும் டிக்கெட் முறையாக கொடுப்பார்கள்.
இப்படி கறுப்பு பணத்தில் திளைத்த தூத்துக்குடி தியேட்டர்காரர்கள் இன்று ஏதோ ஒரு டப்பிங் படத்தின் வால்போஸ்டரை ஒட்டிக் கொண்டு ஒரு 10 பேராவது வர மாட்டார்களா என்று ஏக்கத்தோடு பார்ப்பதும் அப்படி வரவில்லையென்றால் காட்சியை ரத்து செய்து விட்டு ஓய்வும் எடுத்துக் கொள்வதை பார்த்தால் தெய்வம் தண்டனையை மிகுந்த கால தாமதாக்கி கொடுப்பதை பார்க்கிறோம்.
"ரகசிய போலீஸி"ன் முதல் 11 நாள் வசூல் அதுவரை வந்த எந்த படமும் பெறவில்லை என்பதை விநியோகஸ்தர்கள் அடித்து கூறினார்கள். தூத்துக்குடியில் முதன்முதலாக 30 நாட்களை தாண்டி 33 நாட்கள் வரை பகல் காட்சி நடைபெற்ற படம். 53 நாட்கள் ஓடி வசூல் 50000 ரூ தாண்டி பெற்ற படம். அதுவரை எந்த படமும் இந்த சாதனையை செய்யவில்லை. மதுரையில் 92 நாட்களில் பெற்ற வசூல் அதுவரை எந்த நடிகரின் படங்களும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 26 திரையரங்குகளில் 50 நாட்களை தாண்டி அசுரவெற்றியை பெற்ற படம். பிப் 23ல் வந்த 'தேர்த்திருவிழா" மற்றும் மார்ச் 15ல் வெளியான "குடியிருந்த கோயில்" "ரகசிய போலீஸி"ன் வேகத்தை குறைத்தாலும் இன்று வரை விநியோகஸ்தர்களின் பொக்கிஷமாக கொண்டாடப் படுகிறது.
நன்றி நடிக்கப் பேரரசர் குழு...






















