• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் கனேடிய அரசியல்வாதி சீன தூதரகத்தின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் சாங் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தைவான் பயணங்களுக்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், "கனடாவின் இறையாண்மையை நிலைநாட்டவே" தாம் இப்பயணத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சரான மைக்கேல் சாங், அடுத்த வாரம் தைவான் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

தனது தைவான் பயணம் குறித்து 'X' (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள மைக்கேல் சாங், இப்பயணத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அதன் எல்லையில் இருக்கும் தைவான் என்ற ஒரு ஜனநாயக நாட்டிற்குத் தங்களின் ஆதரவையும் ஒற்றுமையையும் காட்டுவது முதல் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

கனேடிய எம்பிக்கள் எங்குச் செல்ல வேண்டும் என்று ஒரு வெளிநாட்டு அரசு உத்தரவிட முடியாது. சீனாவின் எச்சரிக்கைக்குப் பயப்படாமல் கனடாவின் இறையாண்மையை நிலைநாட்டுவது இரண்டாவது நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கனடாவுக்கான சீன தூதர் வாங் டி (Wang Di) அளித்த நேர்காணல் ஒன்றில், கனேடிய எம்பிக்கள் தைவான் அதிகாரிகளைத் தொடர்ந்து சந்தித்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படலாம் என எச்சரித்திருந்தார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே சாங் இப்பயணத்தைத் திட்டமிட்டுள்ளார். மைக்கேல் சாங்கின் இந்த தைவான் பயணத்திற்கு கனடாவில் உள்ள சீன தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரின் தைவான் பயணம், ஒட்டாவா (கனடா அரசு) எங்களின் 'ஒரே சீனா கொள்கைக்கு' (One China Policy) அளித்த வாக்குறுதிக்கு எதிரானது. கனடா தனது கொள்கையை உண்மையுடன் பின்பற்ற வேண்டும். சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாகக் கருதுகின்ற போதிலும், சீனா அதனைத் தனது சொந்த பிராந்தியம் என்றே உரிமை கொண்டாடி வருகிறது. நீண்டகால 'ஒரே சீனா' கொள்கையின்படி, கனடா பெய்ஜிங்கில் உள்ள சீன அரசை மட்டுமே அதிகாரப்பூர்வ அரசாக அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply