TamilsGuide

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி - மே 27 இல் சர்வதேச நாணய நிதியம் முக்கிய முடிவு

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்து மற்றும் ஆறாவது இருகட்ட மதிப்பாய்வுகள் (Reviews) குறித்த இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதியை நிவர்த்தி செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் இந்த மதிப்பாய்வுகளுக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு அடுத்த கட்டமாக சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான வழி திறக்கப்படும் என அந்த நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு இந்த நிதிப் பங்கீடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, இந்த மதிப்பாய்வுகளுக்கான அனுமதியை நிறைவேற்றுக்குழுவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் சில முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துச் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில்:
“நாட்டின் பொருளாதாரச் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய வகையிலான மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணய முறைகளை (Pricing formulas) இலங்கை மீண்டும் நிலைநிறுத்துவது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும். எனினும், இந்த விலை மாற்றங்களின் போது சமுதாயத்தில் பாதிக்கப்படக்கூடிய ஏழை எளிய தரப்பினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.”

இதன்படி, எதிர்வரும் மே 27ஆம் திகதி வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஐஎம்எஃப் செயற்குழு கூட்டத்தின் முடிவுகள், இலங்கையின் அடுத்தகட்ட பொருளாதார நகர்வுகளில் தீர்மானமிக்க ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment