TamilsGuide

அமெரிக்க எரிபொருள் சேமிப்பு அமைப்புகள் மீது சைபர் அச்சுறுத்தல்

அமெரிக்காவின் பல மாநிலங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு சேவை வழங்கும் சேமிப்புத் தொட்டிகளில் உள்ள எரிபொருள் அளவைக் கண்காணிக்கும் தானியங்கி அமைப்புகள் (ATG) மீது ஈரானிய ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு விசாரணைகளின் அடிப்படையில் இந்த சந்தேகத்துக்கிடமான இணைய ஊடுருவல்கள் கண்டறியப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.

கடவுச்சொற்கள் இல்லாமல் இணையத்தில் இயங்கிக் கொண்டிருந்த சில ATG அமைப்புகளை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், தொட்டிகளில் உள்ள உண்மையான எரிபொருள் அளவை மாற்ற முடியாவிட்டாலும், கணினி திரையில் காட்டப்படும் அளவீடுகளை மாற்றியமைக்க முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலால் நேரடி பௌதீக சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் வாயுக் கசிவு கண்டறிதல் போன்ற முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

விசாரணை வட்டாரங்களின்படி, எரிவாயு சேமிப்பு அமைப்புகளை இலக்காகக் கொண்ட இணைய தாக்குதல்களில் ஈரானின் முந்தைய தொடர்புகள் இருப்பதால், இந்த சம்பவத்திலும் ஈரான் முக்கிய சந்தேக நாடாக பார்க்கப்படுகிறது.

ஆனால், தாக்குதலாளிகள் விட்டுச் சென்ற உறுதியான தடயவியல் ஆதாரங்கள் இல்லாததால், இதற்குப் பொறுப்பு யார் என்பதை திட்டவட்டமாக நிரூபிக்க முடியாமல் போகலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் எரிபொருள் உள்கட்டமைப்பு சைபர் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
 

Leave a comment

Comment