அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விவசாயிகளுக்குக் காலாவதியான உரம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து தேசிய உர செயலகத்தின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள, கடந்த 2019ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட MOP (Muriate of Potash) உரத்தின் மாதிரிகள் அவசரப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மஹ கனதராவ பிரதேசத்தில் உள்ள ரம்பேவ விவசாய சேவை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பண்டுகாபயபுர விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக இந்த உரத் தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த MOP உரமானது, தரம் குறைந்த மற்றும் முற்றிலும் காலாவதியான உரம் என நேற்றைய தினம் விவசாயிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.
6 வருடங்களுக்கு முந்தைய உரம் என்பதால், இதனைப் பயன்படுத்துவதால் பயிர்கள் பாதிக்கப்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே, சந்தேகத்திற்குரிய உர மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உரத் தொகுதி தற்போது விவசாயப் பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது, இந்த மாதிரிப் பரிசோதனை முடிவுகள் (Lab Reports) வெளியான பின்னரே உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதுவரை இந்த உர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


