அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம், மேலும் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 16 அன்று ஆரம்பமான மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையானது, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மேலதிக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேலும் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வோஷிங்டனில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் வரும் ஜூன் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் ஆரம்பமான மூன்று நாட்களில் (மார்ச் 2), ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்ததுடன், கடந்த மாதம் தெற்கு லெபனானிற்குள் தரைவழி ஊடுருவலையும் விரிவுபடுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதியால் ஏப்ரல் 16 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வந்தன.
எனினும், தற்போதைய போர்நிறுத்த நீடிப்பு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


