கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்பாராத தடை உருவாகியுள்ளது.
கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.
ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.
ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.
இந்நிலையில், Stay Free Alberta என்னும் அமைப்பின் தலைவரான மிச் சில்வெஸ்டர் என்பவர், முறைப்படி அரசின் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பில் புகார் மனு ஒன்றை உருவாக்கினார்.
அந்த மனு வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமானால், அது சுமார் 178,000 கையெழுத்துக்களைப் பெறவேண்டும்.
ஆனால், அந்த மனு 300,000 கையெழுத்துக்களைப் பெற்றுவிட்டதைத் தொடந்து, மனு முறைப்படி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மனு அங்கீகரிக்கப்படும் நிலையில், அக்டோபர் மாதம் 19ஆம் திகதி அது வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்ற நிலை காணப்பட்டது.
ஆனால், அந்த மனுவை நீதிபதி ஒருவர் நிராகரித்துவிட்டார்!
ஆம், இப்படி ஒரு மனுவை ஆல்பர்ட்டா தேர்தல் அமைப்பு ஏற்றுக்கொண்டிருக்கவேகூடாது என்று கூறியுள்ளார் Justice Shaina Leonard என்னும் நீதிபதி.
அதாவது, 19ஆம் நூற்றாண்டில், பூர்வக்குடியினருக்கு உரிமைகள் அளிக்கும் வகையிலான பல ஒப்பந்தங்கள் பூர்வக்குடி மக்களுக்கும் ஆளும் அரசுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டன.
ஆக, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது பூர்வக்குடியினரின் சட்ட மற்றும் பிராந்திய உரிமைகளை பாதிக்கும்.
அப்படியிருக்கும் நிலையில், ஆல்பர்ட்டாவை கனடாவிலிருந்து பிரிப்பது தொடர்பான பேச்சு எழுந்தபோது, அது குறித்து பூர்வக்குடியினருடன் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால், மாகாண அரசோ, தேர்தல் அதிகாரிகளோ பூர்வக்குடியினருடன் கலந்தாலோசிக்கவில்லை.
ஆகவே, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான மனு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


