முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்தோடு அல்லப்பிட்டி சேமக் காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அல்லைப்பிட்டி
அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி
இந்நிலையில் வடமராட்சி மந்திகை சந்தை பகுதியிலும் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றன.
இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பொது ஈகை சுடரினை மாவீரர்களின் சகோதரன் ராஜி ஏற்றிவைக்க, மலர் அஞ்சலியினை சோமஸ்கந்த குருக்கள் தனஞ்சய குருக்கள் ஆரம்பித்து வைக்க மக்களால் மெழுகு வர்த்தி ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வடமராட்சி மந்திகை
வடமராட்சி மந்திகை சந்தை பகுதியிலும் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது
இதேவேளை அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
அங்கு கஞ்சி காய்ச்சி முன்னால் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு மே 18 என எழுதப்பட்ட சிரட்டையில் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாறை – திருக்கோவில்
முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்திலும் இடம்பெற்றது.


