TamilsGuide

கனேடிய ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்றில் உளவுத்துறையினர் விசாரணை பின்னணி

ரஷ்யர்கள் கையில் கனேடிய துப்பாக்கிகள் காணப்படுவதைக் காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவரும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் கனேடிய தயாரிப்பான Cadex rifle வகை துப்பாக்கிகள் மாஸ்கோவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதைக்காட்டும் காட்சிகள் வெளியாகின. 

அத்துடன், ரஷ்ய ஸ்னைப்பர்கள் என்னும் துப்பாக்கி சுடும் வீரர்கள் இந்த வகை துப்பாக்கிகளை வைத்திருக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

விடயம் என்னவென்றால், ரஷ்யா உக்ரைனை ஊடுருருவியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட்டதால், கனடா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

அப்படியிருக்கும் நிலையில், கனேடிய துப்பாக்கிகள் ரஷ்யர்களை சென்றடைந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. 

ரஷ்யர்கள் கையில் கனேடிய துப்பாக்கிகள் இருக்கும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், கனேடிய பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு கியூபெக்கிலுள்ள ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு அது குறித்த விவரங்களை வெளியிடவில்லை. என்றாலும், அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்யா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலிருந்து ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக பெற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment